மதுரையை சேர்ந்த முத்துச்செல்வம் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், மதுரையில் ஹரிஜன் சேவா சங்கம் சார்பில் பள்ளி தொடங்கப்பட்டது. இதேபோல் கல்லிடைக்குறிச்சி திருக்கோவிலூரில் தொடங்கப்பட்ட பள்ளியில் 689 பேர் பயின்று வருகின்றனர். 9 ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவ்விரு பள்ளிகளுக்கும் போதுமான அளவில் நிதி வழங்கப்படவில்லை. அதேபோல விழுப்புரத்தில் இயங்கி வரும் பள்ளிக்கு மூன்று ஆண்டுகளுக்கு கல்வி நிதியுதவி வழங்கப்படவில்லை.
இது தொடர்பாக நடவடிக்கை கோரி மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. ஆகவே ஹரிஜன சேவா சங்கத்தின் கீழ் இயங்கிவரும் பள்ளிகளுக்கு போதிய நிதியுதவி வழங்க உத்தரவிடவேண்டும் எனக் கூறியிருந்தார்.
இந்த வழக்கு இன்று நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், புகழேந்தி அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசுத்தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய கால அவகாசம் கோரப்பட்டது. இதையேற்ற நீதிபதிகள், வழக்கை மார்ச் 19ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.