ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த அகமது இப்ராஹிம் அலி என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில் கூறப்பட்டிருந்ததாவது:
பரமக்குடி தாலுகா தண்டாராதேவிபட்டினம் அருகே உரப்புளி கிராமத்தில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் கட்டுமான பணிகள் நடைபெறுகின்றன. இந்தப் பணிக்கு இந்திய அரசின் ஸ்வச் பாரத் திட்டத்தின் கீழ் ரூ.5 கோடியே 68 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இப்பணியானது செய்தித்தாள் மூலம் எவ்வித விளம்பரம் கொடுக்காமல் தனி நபருக்கு டெண்டர் கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கட்டுமானம் நடக்கும் இடத்தில், அங்கு நடைபெறும் பணியின் தகவல் பலகை வைக்கவில்லை. மேலும் கட்டுமான பணிகள் நடைபெறும் இடத்தின் அருகே மக்கள் வசிக்கும் பகுதியாகும். இந்தத் திட்டத்தை செயல்படுத்த மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் அனுமதி பெற வேண்டும். ஆனால் எவ்வித அனுமதியும் வாங்காமல் இந்தத் திட்டத்தின் பணிகள் நடைபெறுகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள நிலத்தடி நீர் மற்றும் விவசாயப் பணிகள் பெருமளவில் பாதிக்கும் அபாயம் உள்ளது. எனவே திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் நடைபெறும் பணிகளை முறையாகவும், வெளிப்படையாகவும் டெண்டர் விடப்பட்டு பணிகள் நடைபெற உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு, நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ், ஆனந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய குடிநீர் மற்றும் சுகாதாரத் துறை இயக்குனர் மனுவை பரிசீலித்து 6 வாரத்தில் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க: ஜெ. பிறந்தநாள்: 123 சர்வ சமய இணையருக்கு சீர்வரிசையுடன் திருமணம்