மதுரை கீழகுடி பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் விஜயகுமார் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், "எதிர்காலம் டிஜிட்டல் மயமாகவே இருக்கப்போகிறது. அதற்கு நாமும் தயாராகிக் கொள்ள வேண்டும்.
டிஜிட்டல் லாக்கர் இப்போதைக்கு புதுசு நாளை அத்தியாவசியமாகும் வங்கிகளில் கொடுக்கும் பாதுகாப்புப் பெட்டகங்களைப் போன்றதுதான் இதுவும்.
வங்கி லாக்கரில் நேரடியாக பொருள்களை வைக்கலாம். ஆனால், இந்த டிஜிட்டல் பெட்டகத்தில் ஸ்கேன் செய்யப்பட்ட, அல்லது டிஜிட்டல் முறையில் உருவாக்கப்பட்ட ஆவணங்களை மட்டுமே பாதுகாக்க முடியும்.
இதற்குக் கட்டணம் இல்லை. அடிக்கடி தொலைந்து போகக் கூடிய பான் கார்டு, ரேஷன் கார்டு, பள்ளி/கல்லூரி சான்றிதழ்கள், பாஸ்போர்ட், மார்க் ஷீட், நிலப் பத்திரங்கள் போன்றவற்றை ஸ்கேன் செய்து இந்த இணையதளத்தில் பதிவேற்றிவிட்டால் போதும்.
அதன் பிறகு இந்த ஆவணங்கள் தொலைந்தாலும் இந்த லாக்கரில் இருந்து அவற்றை மீண்டும் நகல் எடுத்துக்கொள்ளலாம்.
கேரளா, ஹரியானா, பஞ்சாப், குஜராத், ஒரிசா போன்ற மாநிலங்களில் உயர் கல்வித்துறையில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு உள்ளது. ஆகவே தமிழ்நாட்டில் டிஜிட்டல் லாக்கர் முறையை அறிமுகப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எனவே ஒரு குறிப்பிட்ட கால அளவிற்குள் மாணவர்களின் கல்விச் சான்றிதழ்கள் உள்ளிட்ட ஆவணங்களை டிஜிட்டல் லாக்கர் முறையில் பாதுகாக்கும் நடைமுறையை கொண்டு வருவதற்கு உரிய வழிமுறைகளை, விதிமுறைகளை ஏற்படுத்த உத்தரவிட வேண்டும்.
இதன் காரணமாக தமிழ்நாடு அரசு மாணவர்களின் நலன் கருதி, டிஜிட்டல் லாக்கர் முறையை நடைமுறைப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" என்று கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, இதுகுறித்து மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நவம்பர் 11ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.