மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த புஷ்பவனம் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அந்த மனுவில், 'நாட்டில் 22 இடங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதில் ஆறு எய்ம்ஸ் மருத்துவமனைகள் செயல்பட்டு வருகின்றன.
16 மருத்துவமனைகளின் கட்டுமானப் பணிகள் நடைபெற்றுவருகின்றன. அத்துடன் வெளிப்புற நோயாளிகள் துறை, எம்பிபிஎஸ் சேர்க்கை தொடங்கப்பட்டுள்ளது. மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க 2018ஆம் ஆண்டு அனுமதி வழங்கப்பட்டது. ஆனால், இங்கு நோயாளிகள் துறை, எம்பிபிஎஸ் சேர்க்கை பணிகள் தொடங்கப்படவில்லை.
எனவே, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான 'ப்ராஜெக்ட் செல்' உருவாக்கி இயக்குநர், மருத்துவ கண்காணிப்பாளர், இணை இயக்குநர், நிர்வாக அலுவலர்கள் நியமனம், தற்காலிக வெளிப்புற நோயாளிகள் துறை, எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கையைத் தொடங்க உத்தரவிட வேண்டும்' எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
மாணவர் சேர்க்கைக்குப் பரிந்துரை
இந்த மனு மீதான விசாரணை இன்று (ஜூலை 26) நீதிபதிகள் சிவஞானம், ஆனந்தி ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு அரசு தரப்பில், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு, தற்காலிகமாக மதுரை, தேனி, சிவகங்கை ஆகிய மருத்துவக் கல்லூரிகளில் முதல்கட்டமாக 50 எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி வழங்க பரிந்துரை செய்யப்பட்டது.
ஒன்றிய அரசு அனுமதி வழங்கினால் அதற்கான பணிகள் தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள் தமிழ்நாடு அரசின் பரிந்துரை குறித்து ஒன்றிய அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஜூலை 30ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க: மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அனைத்து ஒத்துழைப்பு வழங்கத் தயார் - நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு பதில்!