மதுரை மாவட்ட வில்லாபுரத்தைச் சேர்ந்த லதா, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில் கூறியதாவது;
ஆதிதிராவிட நலத்துறையின் இலவச வீட்டு மனை திட்டத்தின் கீழ், மதுரை தெற்கு தாலுகா பாப்பனோடை கிராமத்தில் கடந்த 1999ஆம் ஆண்டு இலவச வீட்டு மனை வழங்கப்பட்டது. என்னை போல நிலமற்ற ஆதிதிராவிட ஏழைகள் பலருக்கும் வழங்கப்பட்டது. தகுதியான நபர்கள் கண்டறியப்பட்டு தலா இரண்டு சென்ட் வீதம் 82 பேருக்கு வழங்கப்பட்டது.
இந்த இடங்களில் வழிகாட்டு விதிமுறைகளை பின்பற்றி சிலர் வீடுகள் கட்டியுள்ளனர். ஏழ்மை சூழல் காரணமாக சிலர் எந்தவிதமான கட்டுமானப் பணிகளையும் மேற்கொள்ளவில்லை. சிலரது குடிசை வீடுகள் இயற்கை பேரிடர் காரணமாக சேதமடைந்தது. சிலர் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து காத்துள்ளனர். பாதி கட்டியுள்ள நிலையில் கரோனா தொற்று காரணமாக பணியை தொடர முடியாமல் பலர் சிரமத்தில் உள்ளனர்.
இந்நிலையில், ஆதிதிராவிடர் நலத்துறைத்துறை சிறப்பு தாசில்தார் அனைவருக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில், பட்டா வழங்கிய விதிகளை பின்பற்றவில்லை. எனவே, அனைவரும் உரிய விளக்கமளிக்க வேண்டும். இல்லாவிட்டால் அனைவரையும் காலி செய்ய வேண்டி வரும் என கூறியுள்ளார். பலர் வீடுகள் கட்டி இருப்பதை கவனத்தில் கொள்ளாமல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். எனவே, இந்த நடவடிக்கையை நிறுத்த வேண்டுமென உயர் அலுவலர்களுக்கு மனு அளித்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எங்களை வெளியேற்றினால் பெரிதும் பாதிப்போம்.
எனவே, எங்களை வெளியேற்ற தடை விதிக்க வேண்டும், வெளியேற்றும் உத்தரவை ரத்து செய்ய வேண்டும். சம்பந்தப்பட்ட நிலங்கள் எங்களிடமே இருப்பதை உறுதி செய்ய வேண்டும்” என மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எம்.சத்யநாராயணன், பி.புகழேந்தி ஆகியோர் அமர்வு, அரசு தரப்பு நோட்டீஸ் அடிப்படையில், உரிய ஆவணங்களுடன் மனுதாரர் உள்ளிட்டோர் மூன்று வாரத்திற்குள் தங்கள் தரப்பு விளக்கத்தை அளிக்க வேண்டும். இந்த மனு அடிப்படையில் அரசு அலுவலர்கள் நான்கு வாரத்திற்குள் பரிசீலித்து உத்தரவிட வேண்டும். அதுவரை எந்த மேல் நடவடிக்கையும் தேவையில்லை என உத்தரவிட்டுள்ளனர்.