நடிகர் ரஜினிகாந்த் தான் அரசியலுக்கு வருவதாகவும், தனிக்கட்சி தொடங்கவிருப்பதாகவும் அண்மையில் அறிவிப்புச் செய்திருந்தார். இதற்கான பூர்வாங்க அறிவிப்புகளை ரஜினி டிசம்பர் 31 அல்லது வருகின்ற ஜனவரி 17ஆம் தேதி வெளியிடவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் ரஜினி மக்கள் மன்றம் சார்பாக முதற்கட்டமாக பூத் கமிட்டிகள் அமைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்கமிட்டிகள் அமைப்பதில் முறைகேடுகள் நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஒரு பூத்துக்கு 15 பேர் வீதம் கமிட்டி அமைத்து நாளைக்குள் (டிசம்பர் 25) சமர்ப்பிக்க வேண்டும் என ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் மூலமாக அறிவிக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
மதுரையில் பூத் கமிட்டிக்காக நியமிக்கப்பட்டவர்களின் விவரங்களைத் தலைமை உத்தவின்பேரில் சரிபார்ப்பதாகவும், இரண்டாண்டுகளுக்கு முன்பு பெறப்பட்ட விவரங்கள் என்றும் ரஜினி மக்கள் மன்றம் சார்பாகப் பேசுவோர் கூறுவதும், பெரும்பாலானோர் எவ்வாறு தங்களது விவரங்களைப் பெற்றீர்கள் என்று கேள்வி எழுப்புவதும் ஆடியோ ஒன்றில் இடம் பெற்றுள்ளன.
இந்த ஆடியோ தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்திவருகின்றன.