மதுரை தனியார் மருத்துவமனையில் உடல் நலக்குறைவால் சிகிச்சைப்பெற்றுவந்த தமிழ்நாடு சட்டப்பேரவை முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா இன்று காலமானார். இவரின் அரசியல் பயணம் குறித்து இங்கே காணலாம்.
மறைந்த ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது, அவரது அமைச்சரவையில் சட்டப்பேரவை சபாநாயகராகவும், மத்தியில் பாஜகவின் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான அமைச்சரவையில் தரைவழி போக்குவரத்துத்துறை அமைச்சராகவும், அதே சமயம் அதிமுகவின் பொருளாளராகவும் இருந்தவர், சேடப்பட்டி முத்தையா.
தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு சேடப்பட்டி தொகுதியிலிருந்து நான்கு முறை தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து அவ்வூரின் பெயரே, அவரின் பெயருடன் இணைந்து அவருக்கு அடையாளம் ஆகி விட்டது. எம்.ஜி.ஆர். திமுகவிலிருந்து விலகிய போது, அவருடன் இணைந்து தோள் கொடுத்தார் சேடப்பட்டி முத்தையா. அன்றைய நாட்களில் அதிமுகவின் முதல் எம்.பி.யான மாயத்தேவருக்கு இணையாக ஒருங்கிணைந்த மதுரை மாவட்டத்தில் செல்வாக்கு பெற்று திகழ்ந்தார்.
எம்.ஜி.ஆருக்கு பின்னர் கடந்த 1991ஆம் ஆண்டு முதல் 1996ஆம் ஆண்டு வரை ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது சட்டப்பேரவை சபாநாயகராக இருந்தார். மேலும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு மிக நெருக்கமான தலைவராக இருந்தார். தான் சட்டப்பேரவை சபாநாயகராக இருந்த காலத்தில் பல்வேறு சர்ச்சைகளுக்கும் ஆளானார்.
பெரியகுளம் தொகுதியில் இருந்து அதிமுக சார்பில் இரண்டு முறை நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டவர். முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அமைச்சரவையில் தரைவழிப்போக்குவரத்துத்துறை அமைச்சராக பணியாற்றியவர். அதிமுக பொருளாளராகவும் பொறுப்புவகித்தவர்.
தற்போது தென்தமிழ்நாட்டில் மருத்துவர்கள் உருவாகக் காரணமான திருமங்கலம் ஹோமியோபதி கல்லூரி அமைய மிக முக்கியப் பங்காற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் உடல் நலிவுற்று, சில காலம் அரசியலில் தீவிரமாகப் பங்கேற்காமல் இருந்தார். உடல் நலிவுற்ற நிலையில் இருந்த தனக்கு ஜெயலலிதா உதவி செய்யவில்லை என்று குற்றம்சாட்டி, கடந்த 2006ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் திமுக தலைவர் கருணாநிதி முன்னிலையில், தனது ஆதரவாளர்களுடன் அக்கட்சியில் இணைந்தார்.
தற்போது வரை திமுகவில் இருந்து வந்தார். இவரது மகன் மணிமாறன் மதுரை தெற்கு மாவட்ட திமுகவின் செயலாளர் ஆக உள்ளார். கடந்த சட்டப்பேரவைத்தேர்தலில் ஆர்.பி. உதயகுமாரை எதிர்த்து திருமங்கலம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.
இதையும் படிங்க: முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா காலமானார்