மதுரை தெப்பக்குளம் பகுதியில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றில் உரிய அனுமதியின்றி ஆறு யானைகள் அழைத்துவரப்பட்டு, மக்களை வரவேற்பதற்காக பயன்படுத்தி உள்ளனர்.
இது சம்பந்தமாக வீடியோ ஆதாரத்துடன் வனத் துறை அலுவலர்களுக்கு வந்த புகாரின் பெயரில், அந்த யானைகளின் உரிமையாளர்களை வனத் துறையினர் அழைத்துவந்து விசாரணை நடத்தியுள்ளனர்.
அதில் மதுரையைச் சேர்ந்த நான்கு தனியார் வளர்ப்பு யானைகளான குஷ்மா, லட்சுமி, ப்ரியா, பேரையூரைச் சேர்ந்த ரெளத்திர லட்சுமி உட்பட மேலும் அந்தமான், அஸ்ஸாமில் இருந்து முறைகேடாக கொண்டுவரப்பட்ட மாலாச்சி, ரூபாலி என்கின்ற யானைகளும் அந்த திருமண விழாவில் கலந்துகொண்டன.
இந்த அனைத்து யானைகளுக்கும் தமிழ்நாடு வனவிலங்கு பாதுகாப்பு அலுவலகத்திலிருந்து எவ்வித அனுமதி, தடையில்லாச் சான்று இல்லை என வனத் துறையினர் தெரிவித்துள்ளனர்,
விசாரணை அறிக்கையானது இன்னும் ஓரிரு நாட்களில் சென்னை தலைமை வனஅலுவலகத்தில் தாக்கல் செய்யப்படும் என வனத் துறை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.