தேனி - அல்லிநகரம் நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. இப்பகுதிகளில் நாள்தோறும் சேகரிக்கப்படும் குப்பைகள் வீரபாண்டி அருகே தப்புக்குண்டு சாலையில் உள்ள குப்பைக் கிடங்கில் கொட்டப்பட்டு வருகின்றன. சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் உள்ள கிடங்கில் கொட்டப்பட்டுள்ள குப்பைகள் மலைபோல் குவிந்து கிடக்கின்றன.
இந்நிலையில் இந்தக் குப்பைக் கிடங்கில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இன்று காலைக் குப்பைப் பிரிப்பதற்காக வந்த பணியாளர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தேனி தீயணைப்புப் படையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
ஆனால் கட்டுக்குள் அடங்காமல் தொடர்ந்து தீ எரிந்து வருவதால் கடமலைக்குண்டு தீயணைப்பு நிலையம் மற்றும் தேனி அல்லிநகரம் நகராட்சியின் லாரிகள், 10க்கும் மேற்பட்ட வாகனங்களில் தண்ணீர் கொண்டு வரப்பட்டு தீயை அணைக்கும் பணியில் சுமார் 40 தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆனாலும் தீ கட்டுக்குள் அடங்காமல் எரிந்து கொண்டே இருக்கிறது. இந்தத் தீ முற்றிலும் குறைவதற்கு 2 தினங்களுக்கு மேல் ஆகும் என தீயணைப்பு துறையினர் தகவல் தெரிவிக்கின்றனர்.
குப்பைக் கிடங்கு தீ விபத்தால் வீரபாண்டி - தப்புக்குண்டு சாலையில் ஏற்பட்டுள்ள புகை மூட்டத்தால் அப்பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்களுக்கு சிரமம் அடைந்துள்ளனர்.