மதுரை: நடிகர் ரஜினிகாந்த், கட்டாயம் அரசியலுக்கு வந்து ஆன்மிக அரசியல் தருவேன், அரசியல் பிரவேசத்திற்கான முடிவை டிச.,31 ஆம் தேதி தெரிவிப்பேன் என, கடந்த ஆண்டு தெரிவித்திருந்தார். அதனைக் கொண்டாடும் விதமாக, அவரது ரசிகர்கள் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி, பட்டாசு வெடித்து உற்சாகமாக கொண்டாடி வந்தனர்.
இந்த நிலையில், எனது உடல் நிலையைக் கருத்தில் கொண்டு, நான் இனி அரசியலுக்கு வரமாட்டேன் என, அதிர்ச்சிகரமான முடிவை ரஜினி தனது ரசிகர்களுக்குத் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து ரஜினி ரசிகர் மன்றத்தினர், அவர் அரசியலுக்கு வர வேண்டும் என பல்வேறு போராட்டத்தில் ஈடுபட்டுவந்தனர்.
இதற்கிடையில், இனிமேல் அரசியலுக்கு வருவது சாத்தியமே இல்லை என, ரஜினிகாந்த் நேற்று (ஜனவரி 12) தெரிவித்திருந்தார். இதனை அடுத்து அவர் பூரண உடல் நலம் பெற வேண்டி, மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ரஜினி மக்கள் மன்றத்தின் மாவட்ட துணை செயலாளர் அழகர்சாமி தலைமையில், திருப்பரங்குன்றம் சரவண பொய்கையில், கோல்டன் சரவணன் என்பவர் 21 அக்னி சட்டி ஏந்தியும், ஜெயமணி என்பவர் கிரேன் இயந்திரம் மூலம் பறவை காவடி எடுத்தும் நேர்த்திக்கடன் செய்து வீதியுலா வந்தனர்.
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தாலும் வராவிட்டாலும் எங்களுக்கு ரஜினிகாந்த் பூரண உடல்நலம் பெற வேண்டியே இந்த வேண்டுதலை செய்து வருகிறோம் என ரஜினி மக்கள் மன்றத்தினர் தெரிவித்தனர். இந்த நிகழ்வில் ரஜினி மக்கள் மன்றத்தின் முக்கிய பொறுப்பாளர்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: கழிவறையில் வசிக்கும் குடும்பம் - நடவடிக்கை எடுக்குமா அரசு!