மதுரை சோழவந்தான் செல்லும் சாலையில் துவரிமான் நான்கு வழிச்சாலையிலிருந்து பிரிந்து செல்கிறது புல்லூத்து எனும் இயற்கை எழில் சூழ்ந்த இடம். நாகமலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள இந்தப் பகுதியில் கடந்த 1961-ஆம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது புனித தெலசால் அருட்சகோதரர்களின் முயற்சியால் அமைக்கப்பட்ட 'இளைஞர் நகர்'.
இதனை சுற்றியுள்ள நாகமலை, துவரிமான், கீழமாத்தூர், காமாட்சிபுரம், சோழவந்தான், கொடிமங்கலம், மேலக்கால் உள்ளிட்ட கிராமங்களில் வாழும் ஏழைக் குடும்பங்களின் மேம்பாட்டிற்காக இளைஞர் நகர் சேவை புரிந்து வருகிறது.
இங்குள்ள தொழிற்பயிற்சி மையத்தின் மூலம் வெல்டிங், எலக்ட்ரிக்கல், ஃபிட்டர், கார்பெண்டர், லேத் உள்ளிட்ட படிப்புகள் ஓராண்டு கற்றுத் தரப்படுகிறது. இப்பயிற்சிக்காக குறைந்தபட்ச கல்வி கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மாறாக, உணவு மற்றும் தங்குமிடம் இலவசமாக வழங்கப்படுகிறது. கடந்த 62 ஆண்டுகளில் இங்கிருந்து கற்று சென்ற மாணவர்களின் எண்ணிக்கை சற்றேறக்குறைய 11 ஆயிரத்து 500 பேர்.
இதுகுறித்து 'இளைஞர் நகர்' அருட்சகோதரர் பன்னீர்செல்வம் கூறுகையில், 'கல்வியில், பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள மாணவர்கள் மற்றும் தொழிற்கல்வியில் ஆர்வமுள்ள மாணவர்களுக்காக இந்தப் பயிற்சி மையம் கடந்த 1961ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. உண்மை, உழைப்பு, உயர்வு ஆகியவைதான் இந்த தொழிற்கல்வியின் நோக்கம்.
மத, சாதிய பாகுபாடின்றி அனைவருக்கும் இந்தக் கல்வி வழங்கப்படுகிறது. ஆன்மீகம், யோகா, விளையாட்டு ஆகியவற்றோடு தீபாவளி, விநாயகர் சதுர்த்தி, ரம்ஜான், கிறிஸ்துமஸ் உள்ளிட்ட விழாக்களும் மத பாகுபாடு இன்றி கொண்டாடப்படுகின்றன. இந்து மாணவர்கள் அவர்கள் விருப்பப்படி வழிபாடு செய்து கொள்ளவும் இங்கே முழு அனுமதி உண்டு' என்கிறார்.
ஒவ்வோராண்டும் ஸ்பெயின், ஃபிரான்ஸ், இங்கிலாந்து மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளிலிருந்து மாணவர்கள் இங்கே குறைந்த பட்சம் 2 வாரங்களிலிருந்து ஒரு மாதம் வரை தங்கி, இங்குள்ள மாணவர்களோடு அறிவு மற்றும் கலாச்சாரப் பரிமாற்றம் செய்து கொள்கின்றனர். அது இங்குள்ள மாணவர்களுக்கு புதிய அனுபவமாகும். பயிற்சியில் இணைந்துள்ள மாணவர்கள் ஒவ்வொரு மாதமும் தங்களது தனித்திறனை வெளிக்காட்டுவதற்கான வாய்ப்புகளும் வழங்கப்படுகின்றன.
இளைஞர் நகரின் நிர்வாக இயக்குநர் அருட்சகோதரர் இனிகோ அமலன் கூறுகையில், "அருட்தந்தை விசுவாசம் பெருமுயற்சியால் தாய், தந்தையை இழந்த ஆதரவற்ற மாணவர்களுக்காக இந்த மையம் தொடங்கப்பட்டது. இதற்கு ரோமில் உள்ள எங்களது தலைமையகம் ஒப்புதல் வழங்கியது.
அந்த நோக்கத்திலிருந்து சிறிதும் மாறாமல் இப்பயிற்சி மையம் தொடர்ந்து இயங்கி வருகிறது. தொடக்கத்தில் லேத், வெல்டிங், எலட்ரிக்கல், தச்சு ஆகியவற்றுடன் விவசாய கல்விக்கும் முக்கியத்துவம் கொடுத்து பயிற்சி அளித்து வந்துள்ளோம். பல ஆயிரக்கணக்கான இளைஞர்கள் தற்போது சொந்தமாய் தொழில் தொடங்கி முன்னேறியுள்ளனர்.
மேலும் பலர் பெரிய நிறுவனங்களில் இன்றைக்கும் பணியாற்றி வருகின்றனர். புல்லூத்து இளைஞர் நகர், பயிற்சியில் சேரக்கூடிய இளைஞர்களை நல்வழிப்படுத்தியதுடன், அவர்களது வாழ்க்கை முன்னேற்றத்திற்கு பங்களித்தும் வருகிறது. இங்குள்ள காட்டேஜ் ஒவ்வொன்றிலும் குறைந்தபட்சம் 40 பேர் வரை தங்க முடியும்.
அவற்றில் மாணவர்கள் தங்கி பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். அவர்களுக்கு இங்கு பயின்ற முன்னாள் மாணவரே வார்டனாக உள்ளார். மதம், சாதிக்கு அப்பாற்பட்டுதான் இந்த இளைஞர் நகர் கடந்த 60 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இந்த வளாகத்திலேயே காமாட்சி அம்மன் கோயில் உள்ளது. அங்கு சென்று இந்து மாணவர்கள் தங்களது வழிபாடுகளை மேற்கொள்ளலாம்' என்கிறார்.
ஒற்றுமையின் பலத்தையும் அவசியத்தையுமே இந்த ஓராண்டு கால விடுதி வாழ்க்கை மாணவர்களுக்கு கற்றுத் தருகிறது. ஒழுக்கம், விட்டுக்கொடுத்தல், சகோதர மனப்பாங்கு ஆகியவற்றின் உன்னதத்தை உணர்ந்து கற்பித்தல் பணி நடைபெற வேண்டும் என்பதை தொடர்ந்து அருட்சகோதரர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இதன் காரணமாக ஒவ்வோராண்டும் ஆகஸ்ட் மாதம் இந்திய சுதந்திர நாளன்று பழைய மாணவர்கள் அனைவரும் எங்கிருந்தாலும் இங்கே வந்து சந்தித்து ஒருவருக்கொருவர் அன்பை பரிமாறும் நிகழ்வு இன்றளவும் நடைபெற்று வருகிறது. இதற்கான அனைத்து செலவுகளையும் முன்னாள் மாணவர்களே மேற்கொள்கின்றனர்.
தொழிற்பயிற்சி மையத்தின் தலைமையாசிரியர் ஜெகன்னாதன் கூறுகையில், 'கடந்த 20 ஆண்டுகளாக இந்த பயிற்சி மையத்துடன் எனக்கு தொடர்புள்ளது. இங்குதான் நானும் படித்தேன். தற்போது ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறேன். இங்கு பயின்ற மாணவர்கள் அனைவரும் கல்வியில் மட்டுமின்றி ஒழுக்கத்திலும் சிறந்தவர்களாக உள்ளனர். தங்களுக்கு தேவையான நபர்களை கேட்டு பல்வேறு தொழில் நிறுவனங்கள் எங்களை அணுகி வருகின்றன. ஆகையால் பயிற்சி முடித்ததும் அனைவருக்கும் வேலை உத்தரவாதம் உண்டு' என்கிறார்.
மற்றொரு ஆசிரியரான ரஜினி குமார் கூறுகையில், 'வெல்டிங் ஆசிரியராக கடந்த 7 ஆண்டுகளாக பணியில் உள்ளேன். நான் முன்னாள் மாணவர் என்று சொல்லிக் கொள்வதில் மகிழ்ச்சி. தற்போது இங்கு எலக்ட்ரிக்கல், வெல்டிங் மற்றும் லேத் ஆப்ரேட்டர் என மூன்று பிரிவுகள் உள்ளன. மாணவர்கள் ஒரு பிரிவில் சேர்ந்திருந்தாலும் மூன்றையும் அவர்களுக்கு கற்று கொடுக்கிறோம். இந்த வாய்ப்பு வேறு எங்கும் கிடையாது' என்கிறார்.
இங்கு பயிலும் சென்னையைச் சேர்ந்த மாணவர் பாபு கூறுகையில், 'பாடமுறை கல்வியைவிட செயல்முறை கல்விதான் இங்கு அதிகம். அது மிகவும் பயனுள்ளதாக உள்ளது. அதேபோன்று வாலிபால் எனக்கு விளையாட தெரியும் என்பதால், அனைத்து மாணவர்களுக்கும் நான் அதைக் கற்றுத் தருகிறேன்.
கால்பந்து, கூடைப்பந்து, கிரிக்கெட் போன்ற விளையாட்டுகளும் நாங்கள் விளையாடுவோம்' என்கிறார். ஒவ்வோராண்டும் மார்ச் மாதம் பல்வேறு நிறுவனங்களில் ஒரு மாதம் இன்டெர்ன்ஷிப் நடைபெறுகிறது. அதனை வெற்றிகரமாக நிறைவு செய்தவுடன் அந்நிறுவனத்திலேயே பணியில் சேர வாய்ப்பளிக்கப்படுகிறது.
மற்றொரு மாணவர் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த ராஜேஷ் கண்ணன் கூறுகையில், 'இங்கு படித்த முன்னாள் மாணவர்கள் மூலம்தான் இப்பயிற்சி மையம் குறித்து அறிந்து கொண்டேன். தற்போது தேர்வு எழுதி முடித்தவுடன் எங்களுக்கான பணியில் உடனடியாக சேர முடியும். அதுதான் இந்த பயிற்சியின் சிறப்பம்சமாக கருதுகிறேன்' என்கிறார்.
ஓராண்டு மனநிறைவுடன் கற்றுச் செல்லும் இந்த கல்வி, அவர்களின் வாழ்க்கை மாற்றத்திற்கு அடித்தளமாக அமைகிறது. வேலைக்கான உத்தரவாதத்துடன் இந்த பயிற்சியை நிறைவு செய்கின்ற ஒவ்வொரு மாணவரும் மிகுந்த தன்னம்பிக்கையுடன் வாழ்க்கையை எதிர்கொள்ளும் துணிச்சலுடன் வெளியேறுவதே எங்களுக்கு கிடைத்த நற்சான்றிதழ் என்கின்றனர் இளைஞர் நகரை கனிவுடன் நிர்வாகம் செய்யும் அருட்சகோதரர்கள் பன்னீர்செல்வமும், இனிகோ அமலனும்..
இதையும் படிங்க: 'தன்னம்பிக்கை இருந்தால் கால்களும் கைகளாக மாறும்': +2 பொதுத்தேர்வில் வென்ற மாற்றுத்திறனாளி மாணவி லெட்சுமி!