மதுரை: வீட்டில் நுழைய முற்பட்ட பாம்பை நாய் துரத்தும் காட்சி தற்போது வெளியாகியுள்ளது.
மதுரை பொன்மேனி பகுதியில் நெளரோஜி என்பவர் ஏழு ஆண்டுகளுக்கு மேலாக மேக்ஸ் பிரவ்னி என்ற பெயருடன் நாய் ஒன்றை வளர்த்துவருகிறார். நள்ளிரவு 12 மணியளவில் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்த சமயத்தில் வீட்டினுள் பாம்பு ஒன்று நுழைய முற்பட்டுள்ளது.
இதைக் கண்ட வீட்டின் செல்லப் பிராணியான மேக்ஸ் பிரவ்னி, வீட்டின் நுழைவாயிலில் வந்த பாம்பை வீட்டிற்குள் நுழையவிடாமல் தடுத்து நிறுத்தியதோடு, பாம்பையும் வெளியே துரத்தியது.
வீட்டினுள் இருந்த கண்காணிப்புப் படக்கருவியின் பதிவுகளை ஆய்வுசெய்து பார்த்ததில், இந்தக் காட்சிகளைக் கண்டு வீட்டின் உரிமையாளர் நெகிழ்ச்சியடைந்தார். மேலும், தங்கள் குடும்பத்தைக் காப்பாற்றிய செல்லப் பிராணியான நாயை நெளரோஜி குடும்பத்தார் கொஞ்சி மகிழ்ந்தனர்.