திமுகவின் 15ஆவது உள்கட்சித் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது. இதற்காக அனைத்து மாவட்டங்களுக்கும் மேலிடத் தேர்தல் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தேனி மாவட்ட திமுக உள்கட்சித் தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் தனியார் நட்சத்திர விடுதியில் இன்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில் தேனி மாவட்டத் தேர்தல் மேலிட பொறுப்பாளர் அருண், மாவட்ட திமுக பொறுப்பாளர் கம்பம் ராமகிருஷ்ணன், கொள்கை பரப்புச் செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் மகாராஜன், சரவணக்குமார் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில், தேனி ஒன்றியத்திற்குள்பட்ட கிளைக் கழகங்களுக்கான தேர்தல் பட்டியலை ஒன்றிய பொறுப்புக் குழுத் தலைவர் ரத்தினசபாபதியிடம் ஒப்படைக்கவில்லை எனக்கூறி, அவரது ஆதரவாளர்கள் மாவட்டப் பொறுப்பாளர் ராமகிருஷ்ணன், ஒன்றியப் பொறுப்பாளர் சக்கரவர்த்தி ஆகியோரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இது ஒருகட்டத்தில் கைகலப்பாக மாறி, சக்கரவர்த்தியின் ஆதரவாளர்களால் ரத்தினசபாபதியின் ஆதரவாளரான ஒன்றிய திமுக துணைச் செயலாளர் சுரேஷ் என்பவர் தாக்கப்பட்டார். இதனையடுத்து ரத்தினசபாபதியின் ஆதரவாளர்களால் சக்கரவர்த்தியும் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த மோதலால் கட்சி ஆலோசனைக் கூட்டம் பரபரப்புடன் நடந்து முடிந்தது.
திமுகவில் உள்கட்சித் தேர்தல் ஆலோசனைக் கூட்டத்திலேயே தேனி மாவட்டத்தில் கோஷ்டி மோதல் ஏற்பட்டதால், தேர்தல் நடைபெறும் நாளன்று மேலும் பரபரப்புடன் காணப்படும் எனக் கட்சியினர் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: பிரசன்ன நஞ்சுண்டேஸ்வரர் தரிசனம்... துரிதமாக பெறப்பட்ட மனுக்கள் - இது முதலமைச்சரின் சொந்த ஊர் விசிட்