மதுரை: பழங்காநத்தத்தில் முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக்கை கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜு திறந்து வைத்தார். இதில் மாநகராட்சி ஆணையர் விசாகன் பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய செல்லூர் ராஜு, அதிமுக அரசு, நலத்திட்ட உதவிகளை மக்களுக்கு அள்ளி அள்ளி கொடுத்துள்ளது. அதிமுகவின் சாதனைகளை சொல்லி மக்களை சந்திப்போம். நாங்கள் மானாட மயிலாட நிகழ்ச்சியை பார்க்காமல் மக்களை பார்த்தோம். நாடாளுமன்ற தேர்தலையும், சட்டப்பேரவைத் தேர்தலையும் மக்கள் ஒரே கண்ணோட்டத்துடன் மக்கள் பார்க்க மாட்டார்கள்.
பாஜக ஒரு அகில இந்திய கட்சி, அக்கட்சி முதலமைச்சர் வேட்பாளரை அறிவிக்க வேண்டும் என நினைப்பார்கள். அதேசமயம் அதிமுகவுடன் பாஜக கூட்டணி தொடருகிறது என்பதை பாஜக மாநில தலைவர் முருகனே சொல்லி உள்ளார். தற்போது வரை முதலமைச்சர் வேட்பாளர் அறிவிப்பு தொடர்பாக எந்தவொரு சர்ச்சையும் இல்லை.
கருணாநிதியிடம் இருந்த திறமை அனைத்தும் மு.க.அழகிரியிடம் உள்ளது. மு.க.அழகிரியை புறம் தள்ளி விட்டு திமுக ஆளும் கட்சியாக வருவது என்பது நடக்காத ஒன்று. அழகிரியிடம் இருந்த ரவுடிகள் அனைவரும் தற்போது திமுகவில் உள்ளனர். இவர்களின் சுய ரூபம் ஆளும் கட்சியாக வந்தால்தான் தெரியும்.
மு.க.அழகிரியின் கட்சியால் திமுகவுக்கு பாதிப்பு உள்ளது. திமுக ஆட்சிக் காலத்தில் என் மீதே கொலை வழக்குப்பதிவு செய்தார்கள், பின்னர் நீதிமன்றமே அந்த பொய் வழக்கில் இருந்து விடுவித்தது என கூறினார்.
இதையும் படிங்க: உசிலம்பட்டியில் தமிழி எழுத்துகளுடன் கல்வெட்டு கண்டெடுப்பு!