மதுரை: தேமுதிக மாநில உயர்மட்டக் குழு உறுப்பினர் ஜெ.பாலன் இல்லத் திருமண விழா இன்று (செப். 1) மதுரை முனிச்சாலை அருகேயுள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இதில் தேமுதிக இளைஞரணிச் செயலாளர் விஜய பிரபாகரன் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டி அளித்தார்.
அப்போது பேசிய அவர், "தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நிலை பரிசோதனைக்காக மட்டுமே துபாய் சென்றுள்ளார். அவர் நல்ல உடல்நலத்துடன் உள்ளார். உள்ளாட்சித் தேர்தலில் தேமுதிக நிச்சயம் போட்டியிடும். அதுகுறித்து விஜயகாந்த் திரும்பி வந்தவுடன் அறிவிப்பார்.
அரசியலில் வெற்றி, தோல்வி என்பது அனைத்துக் கட்சிகளுக்கும் சகஜம் தான். கடந்த ஆட்சியின்போது அதிமுகவில் இருந்த சிலர், தற்போது என்ன ஆனார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும்.
எங்களது தோல்வியை குறித்து நாங்கள் முழுவதுமாக உணர்ந்துள்ளோம். ஆனாலும், தேமுதிக தொடங்கியதற்கான இலக்கை விரைவில் அடைவோம்.
ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் மாணவர்கள், பெற்றோர் மிகுந்த பாதுகாப்புடன் இருக்க வேண்டும்.
திமுக ஆட்சி பொறுப்பு ஏற்றதில் இருந்து, தற்போது வரை சிறப்பாகவே செயல்படுகிறது. அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகும் திட்டத்தை நாங்கள் வரவேற்கிறோம்" என்றார்.