மதுரை: திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்யன் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், “தமிழ்நாட்டில் கரோனா நோய்த்தொற்றின் இரண்டாம் நிலை மிக தீவிரமாக பரவி வரும் நிலையில், வழிபாட்டு கூட்டங்கள் பொதுக்கூட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், டாஸ்மாக் கடைகளுக்கு எவ்விதமான கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை.
மதுக்கடைகளில் நிரம்பி வழியும் கூட்டத்தால் கரோனா தொற்று அதிகரிக்க அதிக வாய்ப்பு உள்ளது. ஆகவே, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மதுக்கடைகளையும் மூட உத்தரவிட வேண்டும். மேலும் கரோனா தொற்று பரவல் சரி ஆகும் வரை அனைத்து மது கடைகளையும் மூட மத்திய, மாநில அரசுக்கு உத்தரவிட வேண்டும்" என குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த மனு இன்று நீதிபதிகள் சிவஞானம் ஆனந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் மனுவை திரும்ப பெற்றுகொள்வதாக தெரிவித்தனர். இதனை தொடர்ந்து நீதிபதிகள் தற்போது ஊரடங்கு உத்தரவுகளில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருவதால், இந்த மனுக்களை தள்ளுபடி செய்வதாக நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.
இதையும் படிங்க: முதலமைச்சரின் பொருளாதார ஆலோசனை குழு குறித்த அறிமுகம்