ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியைச் சேர்ந்த அன்பரசன் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் கத்தோலிக்க ஆர்ச் பிரிவில் பட்டியலின கிறிஸ்தவ மக்கள் மீது பாகுபாடு காட்டுவதைத் தடுக்க பொதுநல மனு தாக்கல்செய்தார்.
அம்மனுவில், "இந்தியாவிலுள்ள கத்தோலிக்க கிறிஸ்தவ மக்களில் அதிகமான விழுக்காடு பட்டியலின மக்கள். தமிழ்நாடு, புதுச்சேரி பகுதியிலுள்ள கத்தோலிக்க கிறிஸ்தவ மக்களில் 60 விழுக்காட்டினர் பட்டியலினத்தவராக இருக்கின்றனர்.
கத்தோலிக்க கிறிஸ்தவ உயர் வகுப்பு மக்கள், பட்டியலின மக்களை பாகுபாடு, அடக்குமுறை செய்துவருகின்றனர்.
- தமிழ்நாட்டில் 2000ஆம் ஆண்டு பட்டியலின கிறிஸ்தவ கத்தோலிக்க மக்களுக்குத் தனி ஆலயம் ஏற்படுத்தக் கூறினோம்.
இந்தியாவிலுள்ள ஆர்ச் வகுப்பில் 117 பிஷப்களில் 11 நபர்கள் மட்டுமே பட்டியலினத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கின்றனர். தமிழ்நாட்டிலுள்ள ஆர்ச் வகுப்பில் 18 பிஷப்களில் ஒரு நபர் மட்டுமே பட்டியலினத்தைச் சேர்ந்தவராக இருக்கின்றார்.
- இந்தியாவில் குறைந்தபட்சம் 100 பட்டியலின பிஷப், தமிழ்நாட்டில் 10 பட்டியலின பிஷப் இருக்க வேண்டும். இவ்வாறு இல்லாத காரணத்தினால் தேவாலயத்தில் கத்தோலிக்க பட்டியலின கிறிஸ்தவ மக்களுக்கு எனத் தனிப் பிரார்த்தனை, அமர்வதற்குத் தனி இடம் ஒதுக்குதல், வேலைவாய்ப்பில் பாகுபாடு போன்றவை நடைபெறுகின்றன.
கத்தோலிக் ஆர்ச் பிரிவில் இந்தியா, தமிழ்நாட்டில் பிஷப்பைத் தேர்ந்தெடுக்கும்போது பட்டியலின கிறிஸ்தவ பிஷப்புக்கும் சமமான வாய்ப்பு வழங்க கோரியும், கத்தோலிக்க பட்டியலின கிறிஸ்தவர்கள் மீது பாகுபாடு காட்டுவதைத் தடுக்கக் கோரியும் அலுவலர்களுக்கு மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.
எனவே, நீதிமன்றம் தலையிட்டு எனது மனுவின் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் துரைசாமி, முரளிசங்கர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, நீதிபதிகள் வழக்கு குறித்து மத்திய அரசின் சமூகநீதி துறைச் செயலர், தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறைச் செயலர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க: '150க்கும் மேற்பட்ட புகார்கள்... 1600 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை - இது பப்ஜி மதனின் லீலைகள்!'