மதுரை, சிவகங்கை மாவட்டங்களுக்கு இடையே அமைந்துள்ள திருப்புவனம் வட்டம், கீழடியில் 2014ஆம் ஆண்டிலிருந்து மத்திய, மாநில தொல்லியல் துறைகளின் சார்பாக அகழாய்வுப் பணிகள் தொடங்கப்பட்டன. அதையடுத்து 2017ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு தொல்லியல் துறை சார்பாக மட்டும் அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வந்தன.
அதைத்தொடர்ந்து கீழடியில் 2020ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி 6ஆம் கட்ட அகழாய்வுப் பணிகளை தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். அதில் கீழடியுடன் சேர்ந்து கூடுதலாக கொந்தகை, அகரம், மணலூர் ஆகியப் பகுதிகளும் அகழாய்வுக்காக எடுத்துக் கொள்ளப்பட்டன.
அப்போது பணிகள் தொடங்கிய நிலையில், கரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டது. அதனால் அகழாய்வுப் பணிகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டன. அதைத்தொடர்ந்து தளர்வுகளின் அடிப்படையில் மணலூரில் மே 23ஆம் தேதியில் குறைந்த அளவு பணியாளர்களைக் கொண்டு, அகழாய்வுப் பணிகள் மீண்டும் தொடங்கின.
அதன்படி மணலூரில் இரண்டு குழிகள் தோண்டப்பட்டு, ஆய்வுப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அதில் இன்று சங்க காலத்தைச் சேர்ந்த அடுப்புக் கட்டுமானம் ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. அதுகுறித்து தமிழ்நாடு தொல்லியல் துறையின் இணை இயக்குநர் சிவானந்தம் கூறுகையில், "தற்போது கண்டறியப்பட்டுள்ள இந்தக் கட்டுமானம் உலை அல்லது அடுப்பு போன்ற வடிவமைப்பில் அமைந்துள்ளது. சங்க காலத்தில் இது போன்றப் பயன்பாடு அங்கிருந்த மக்களிடம் இருந்துள்ளது என்பதற்கு கடந்த அகழாய்வுகளே சான்று.
மத்திய தொல்லியல் துறையால் நடைபெற்ற இரண்டாம் கட்ட அகழ்வாய்வின் போது, இது போன்ற கட்டுமானங்கள் நிறைய கிடைத்தன. தற்போது 6ஆம் கட்ட அகழாய்விலும் அதே போன்ற வடிவமைப்பு கிடைத்துள்ளதை ஒப்பிடும்போது, இப்பகுதியில் ஒரே மாதிரியான கலாசாரம் நிலவியதை அறியமுடிகிறது" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: மீண்டும் தொடங்கிய கீழடி அகழாய்வுப் பணிகள்!