மதுரையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் மணிகண்டன். மாற்றுத்திறனாளியான இவர், முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் பிறந்தநாளை (அக்.15) 2020 விதைப்பந்துகளை தூவி வித்தியாசமான முறையில் கொண்டாடியுள்ளார். மதுரையிலிருந்து மேலூர் வரை ஏறக்குறைய 28 கிலோ மீட்டர் தூரத்திற்கு நான்கு வழி சாலையில் இரண்டு புறமும் விதைப்பந்துகளை தூவியுள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், "அப்துல் கலாம் இயற்கை, சுற்றுச்சூழலைப் பாதுகாக்க பசுமை பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று இளைஞர்களை ஊக்கப்படுத்தி வந்தார். மேலும் 2020ஆம் ஆண்டில் இந்தியா அனைத்து வகையிலும் முன்னேற்றம் காண வேண்டும் என்பதை தனது கனவு ஆண்டாக கருதினார். அவரது வழியில் வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் மழைக்காலங்களில் மரம் நடுவது, பனை விதைகள் விதைப்பது உள்ளிட்ட பல்வேறு பசுமை பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தற்போது அவரது பிறந்த நாளை முன்னிட்டு இயற்கை சார்ந்த அவரது எண்ணங்களை நனவாக்கும் ஒரு முயற்சியாக மதுரை-மேலூர் நெடுஞ்சாலை ஓரங்களில் 2020 விதைப்பந்துகளை தூவியுள்ளேன். இதில் ஆலமரம், அரசமரம், புங்கமரம் உள்ளிட்ட பல்வேறு நாட்டுமர விதைகள் தூவப்பட்டுள்ளன. எனது செயல்பாடுகளை காண்போரில் சிலருக்காவது ஆர்வம் ஏற்பட்டு தாங்களும் பசுமை பணிகளில் ஈடுபட்டால், அதுவே எனக்கு பெருமை" என்றார்.
இதையும் படிங்க:'51,620' ஸ்டேப்ளர் பின் சங்கிலியில் அப்துல் கலாம் உருவம் - சாதனை புத்தகத்தில் சென்னை மாணவர்!