இது தொடர்பாக மதுரை உயர் நீதிமன்றக்கிளையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், “தூத்துக்குடி மாவட்டம் சின்னம்ம நாயக்கன்பட்டியைச் சேர்ந்த மனோகரன், புதூர் பேரூராட்சியில் தற்காலிக கொசு ஒழிப்புப் பணியாளராக பணிபுரிந்து வந்துள்ளார். வெளியூர் செல்வதற்காக அருப்புக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகே மனோகரன் சென்ற போது, திடீரென வலிப்பு வந்து மயங்கி விழுந்த அவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்துள்ளார். முன்களப் பணியாளரான மனோகரனுக்கு தடுப்பூசி போட்டதன் காரணமாகவே இறந்துள்ளதாக அவரது உறவினர்கள் குற்றஞ்சாட்டி, உடலை வாங்க மறுத்து போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
கடந்த ஜனவரி 21 ஆம் தேதி மனோகரன் தடுப்பூசி செலுத்திக் கொண்ட நிலையில், உடல்நலக்குறைவு ஏற்பட்டு ஜனவரி 30 ஆம் தேதி உயிரிழந்துள்ளார். ஆகவே, கரோனாவிற்கு தடுப்பூசி போட்டுக்கொண்டதால் உயிரிழந்ததாகக் கூறப்படும் துப்புரவு பணியாளரின் உடலை, ஜிப்மர் அல்லது எய்ம்ஸ் மருத்துவ நிபுணர் குழு அமைத்து மறு உடற்கூராய்வு செய்து, அவரது இறப்பிற்கான காரணத்தை கண்டறிய உத்தரவிடவேண்டும். மேலும் உரிய இழப்பீடு வழங்கவும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கவும் உத்தரவிட வேண்டும்" எனக் கோரியிருந்தார்.
இந்த மனு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, தடுப்பூசி போட்டுக் கொண்டதால் உயிரிழந்தவர்களின் உடலை உடற்கூராய்வு செய்வது தொடர்பாக 2015 ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட வழிகாட்டலின் படி மனோகரனின் உடல் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டதா? இல்லையெனில் அவ்விதியின் படி மறு உடற்கூறு ஆய்வு செய்ய வேண்டும்" என தெரிவிக்கப்பட்டிருந்ததுது.
இந்த மனு இன்று நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆனந்தி அமர்வு முன் விசாரணைக்கு வந்த போது, அரசுத் தரப்பில் சீலிட்ட கவரில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. சில பரிசோதனைகளின் பகுப்பாய்வு முடிவுகள் வர வேண்டியிருப்பதால் இரண்டு வார கால அவகாசம் வழங்க வேண்டும் எனவும் கோரப்பட்டது. இதையடுத்து மனுதாரர் விரும்பினால் மனோகரனின் உடலைப் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவித்த நீதிபதிகள், வழக்கை பிப்ரவரி 22 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க: ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கைது!