மதுரை மாவட்டம் பாலமேடு பகுதியில் வசித்துவரும் முனியாண்டி என்பவர் தனது வீட்டில் பசு மாடு ஒன்றை வளர்த்துவந்துள்ளார். பாலமேடு மஞ்சமலை கோயில் காளையும் இவர் வீடு வழியே செல்லும்போது, பசு மாடுடன் சேர்ந்து பழம், காய்கறிகள், தண்ணீர், அரிசி போன்றவற்றை ஒன்றாகச் சாப்பிட்டு வந்துள்ளது.
இந்நிலையில், கரோனா ஊரடங்கால் வறுமையில் வாடிய முனியாண்டி ராஜா தனது பசு மாட்டினை விற்க முடிவுசெய்து, அதனைத் தனது சரக்கு வாகனத்தில் ஏற்றி அழைத்துச் செல்ல முயன்றார். அப்போது வாகனத்தை வழிமறித்த காளை மாடு சரக்கு வாகனத்தை சுற்றி சுற்றி சுமார் 1 மணி நேரம் பாசப்போராட்டம் நடத்தியது.
அதை மீறி சரக்கு வண்டி செல்லத் தொடங்கியதும், வண்டியின் பின்னாலே ஒரு கிலோ மீட்டர் தூரம் காளை ஓடி மூச்சிறைக்க நின்றது. இந்த வீடியோ இணையத்தில் வைரலானது. இந்நிலையில், இணையத்தில் பரவிய இந்த வீடியோவை கண்ட துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தின் இளைய மகன் ஜெயபிரதீப் அந்தப் பசு மாட்டை விலைக்கு வாங்கி மஞ்சமலைக் கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைத்தார். அப்போது சட்டப்பேரவை உறுப்பினர் மாணிக்கம் உடன் இருந்தார்.
அந்தக் காளை மாட்டுடன் பசு சேர்க்கப்பட்ட இந்நிகழ்வு அப்பகுதி மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: நடமாடும் திருமண மண்டபம் - அசத்தும் அலங்கார மேடை அமைப்பாளர்!