கார்களின் அடிப்பகுதியை தண்ணீரால் கழுவுவதற்காக கார் வாஷிங் நிலையங்களில் ஒரு கால்வாய் போன்ற அமைப்பு இருக்கும். அதில் இறங்கி கார்களின் அடிப்பகுதியை தண்ணீர் அடித்து கழுவுவார்கள். அதுபோல 24 ரயில் பெட்டிகள் கொண்ட முழு ரயிலையும் பராமரிக்க நீளமான கால்வாய் போன்ற அமைப்பு பெரிய ரயில் நிலையங்களில் உள்ளது.
இதை பிட் லைன் [Pit (குழி) Line] என்று சொல்லுவார்கள். இந்த கால்வாய் வழியாக இறங்கி ரயில் பெட்டி பராமரிப்பு பணியாளர்கள் ரயில் பெட்டி சக்கரங்கள் மற்றும் ரயில் பெட்டிகளின் அடிப்பாகத்தில் உள்ள முக்கிய கருவிகளை சோதனை செய்வார்கள். மனித சோதனை மற்றும் கருவிகள் வாயிலாக சோதனைகள் நடைபெறும். இதன் முக்கிய குறிக்கோள் ரயில்களை பாதுகாப்பாக இயக்க வேண்டும் என்பதே. இந்த பிட் லைனின் இருபுறமும் 'கேட் வாக்' எனும் நடைமேடைகள் அமைக்கப்பட்டிருக்கும்.
இதைப் பயன்படுத்தி ரயில் பெட்டிகளின் வெளிப்புறப் பகுதி நீரால் கழுவி சுத்தம் செய்யப்படும். ரயில் பெட்டிகளின் உட்புறமும் நீர்வேக அழுத்த கருவிகள் கொண்டு கழுவப்படும். மேலும் இயற்கை கழிப்பறைகள், அவற்றில் உள்ள சாதனங்கள், ரயில் பெட்டி கதவுகள், விளக்குகள், காற்றாடிகள், அலைபேசியை சக்தியூட்டும் இணைப்புகள் குளிர்சாதன கருவிகள் ஆகியவை இயங்குகிறதா என சோதனை செய்யப்படும்.
இது போன்ற ரயில் பெட்டி பராமரிப்பு பணிகள் மதுரை கோட்டத்தில் மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமேஸ்வரம் போன்ற ரயில் நிலையங்களில் நடைபெற்று வருகிறது. மேலும் ரயில் பெட்டி பராமரிப்பு பணியாளர்கள் பெரிய ரயில் நிலையங்களில் ரயில்கள் உள்ளே வரும்போதும் வெளியே செல்லும் போதும் இருபுறமும் அமர்ந்து ரயில் ஓடும் நிலையில் எதுவும் குறைபாடு தெரிகிறதா என கவனிப்பார்கள்.
இரவு நேரங்களில் மின்சார விளக்கு வசதியுடன் இந்த சோதனை நடைபெறுகிறது. ரயில்கள் மற்ற ஊர்களிலிருந்து ரயில் நிலைய நடைமேடைக்கு வந்தவுடன் ரயில் சக்கரங்களின் இணைப்பு பெட்டிகளது வெப்பநிலையை இன்ஃப்ராரெட் தெர்மாமீட்டர் கொண்டு சோதனை செய்வார்கள். ரயில் பெட்டிகளுக்கு பயணிகள் பயன்பாட்டுக்கு தேவையான தண்ணீர் ஏற்றப்படுகிறது. இந்தப் பணிகள் மழை, வெயில், இரவு, பகல் 24 மணி நேரமும் ரயில் பெட்டி பராமரிப்பு பணியாளர்களால் தொடர்ந்து செய்யப்படுகிறது.
ரயில் பெட்டிகளுக்குரிய காலமுறை சோதனைகளும் (Periodical Overhauling) உரிய நேரங்களில் நடத்தப்படுகிறது. மதுரை கோட்டத்தில் உள்ள நான்கு ரயில் பெட்டி பராமரிப்பு பணிமனைகளில் 961 ரயில் பெட்டிகள் பராமரிக்கும் வசதிகள் உள்ளன தற்போது சராசரியாக 491 ரயில் பெட்டிகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. ரயில்களில் பயணிகள் பாதுகாப்பாக பயணம் செய்ய இது போன்ற பல்வேறு நடவடிக்கைகளை ரயில்வே நிர்வாகம் எடுத்து வருகிறது.
இதையும் படிங்க: ஏற்காடு மலைப் பாதையில் மண் சரிவு...போக்குவரத்து துண்டிப்பு