திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் 'யாருப்பா அந்த பெயிண்டரு' என கூறி சாலையில் கோடு வரையப்பட்ட படத்துடன் மீம்ஸ்கள் உலா வருகின்றன.
இந்த மீம்ஸை பார்த்த திண்டுக்கல்வாசிகள் பலர் அந்த சாலை எங்குள்ளது என தேடி வந்தனர். இந்நிலையில், அந்த சாலை திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி ஒன்றியம் மடூர் ஊராட்சி மணியக்காரன்பட்டியில் இருப்பது தெரியவந்தது.

இந்த சாலை கடந்த 3 மாதங்களுக்கு முன்பு அமைக்கப்பட்டு, இரண்டு வாரங்களுக்கு முன்பு கோடு வரையப்பட்டுள்ளது.
அந்த சாலையில் காவிரி குடிநீர் திட்டத்திற்கான பைப் லைன் இணைப்பு இருந்த இடத்தில் பள்ளம் விழுந்ததுள்ளது. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் பலர் சிறு விபத்துகளில் சிக்கியுள்ளனர்.
இதையடுத்து அந்தப் பள்ளம் இருப்பதை வாகன ஓட்டிகள் அறியும் வண்ணம், தென்ன மர ஓலைகளை போட்டுள்ளனர். இந்த தென்ன ஓலைகளை அகற்றாமல் கோடு போட்டுள்ளனர்.

இதை படம்பிடித்த சிலர், சாலையில் கோடு வளைவாக வரையப்பட்டதாக கூறி சமூகவலைதளத்தில் மீம்ஸ்களாக பரப்பியுள்ளனர்.
இந்த பள்ளத்தால் பெரும் அசம்பாவிதங்கள் நடக்கும் முன் இதை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.