மதுரை: மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 23ஆவது மாநில மாநாடு மார்ச் 30ஆம் தேதி தொடங்கி நேற்று (ஏப். 1) முடிவடைந்தது. மாநாட்டில் எடுக்கப்பட்டுள்ள முடிவுகள் தொடர்பாக கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.
அப்போது பேசிய அவர், "கட்சியின் 23ஆவது மாநாட்டில் தமிழ்நாடு முழுவதும் இருந்து 110 பெண்கள் உள்பட 540 பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
ஆர்எஸ்எஸ்-க்கு எதிரான செயல்திட்டம்: தமிழகத்தில் கட்சியின் சார்பில் கடந்த மூன்றாண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டன. மேலும், எதிர்காலத்தில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் காலூன்ற முயற்சிக்கும் பாஜகவை முறியடிக்கும் வகையில் தீவிரமாக பணியாற்றுவது என முடிவெடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி ஆர்எஸ்எஸ், பாஜக செல்லும் அனைத்து இடங்களிலும் கலாச்சாரம், பண்பாடு, அரசியல் என அனைத்துத்தலங்களிலும் பாஜகவை முறியடிக்கும் வகையில், அனைத்து மதச்சார்பற்ற அமைப்புகளையும் இணைத்துக் கொண்டு செயல்படும் வகையில் செயல்திட்டம் வகுப்பது என முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இந்த வகையில் பாஜகவை எதிர்ப்பதில் தமிழகத்தில் முன்னணியில் உள்ள திமுகவோடு இணைந்து செயல்படுவது, 2024 மக்களவைத் தேர்தலில் பாஜக அல்லாத அணியை உருவாக்குவது எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் திமுக அறிவித்துள்ள பல்வேறு திட்டங்களை வரவேற்பதோடு, திமுக ஏற்கெனவே அறிவித்த திட்டங்களையும் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். வேலையின்மை, விலைவாசி உயர்வு சிறு, குறு தொழில்கள் பாதிப்பு உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் வகையில் திமுக அரசு செயல்பட வலியுறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ராஜகண்ணப்பன் விவகாரத்தில் போதிய நடவடிக்கை இல்லை: அமைச்சர் ராஜகண்ணப்பன் அரசு அதிகாரி ஒருவரை ஜாதியைக்கூறித் திட்டியது ஏற்கத்தக்கதல்ல. இதில், தமிழ்நாடு முதல்வர் உடனடியாகத் தலையிட்டு அமைச்சர் மீது நடவடிக்கை எடுத்துள்ளார்.
ஆனால், இதில் இலாகா மாற்றம் என்பது போதுமான நடவடிக்கை அல்ல. முன்னுதாரணமாக இருக்க வேண்டிய அமைச்சரே ஜாதியைக்கூறி திட்டினால் மற்றவர்கள் எப்படி நடந்து கொள்வார்கள் என்பதை யோசிக்க வேண்டும்.
எனவே, அமைச்சர் ராஜகண்ணப்பன் மீது வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். நாட்டில் நாளுக்கு நாள் உயர்ந்து வரும் பெட்ரோல் டீசல் விலை உயர்வு, 40 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ள சுங்கக்கட்டண உயர்வு ஆகியவற்றுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் வரும் ஏப்ரல் 4ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் 500 இடங்களில் போராட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் ஆலயங்களுக்குச் சொந்தமான இடங்களில் வசிக்கும் மக்களை வெளியேற்றக்கூடாது. நீர்நிலைகளில் வசிக்கும் மக்களுக்கு மாற்று இடம் வழங்கவேண்டும். நீர்நிலை அல்லாத பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி மே 6ஆம் தேதி தமிழகம் முழுவதும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் போராட்டம் நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது" என்றார்.
கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் பெ.சண்முகம், மதுரை மாநகர் மாவட்டச்செயலர் மா.கணேசன் ஆகியோர் உடனிருந்தனர்.
இதையும் படிங்க: 'ஆட்டிச குழந்தைகள் அல்ல, அதிசயக் குழந்தைகள்' - முனைவர் ராணி சக்ரவர்த்தி