மதுரை வரிச்சூர் பகுதியைச் சேர்ந்த குருநாதன் என்பவர் தனது ஆட்டோவில் மதுரை சென்ட்ரல் காய்கறி சந்தைக்குக் காய்கள் வாங்குவதற்குச் சில்லறை வியாபாரிகளான ஏழு பெண்கள் உட்பட எட்டு பேரை தனது ஆட்டோவில் ஏற்றிச் சென்றுள்ளார்.
ஆட்டோ கோமதிபுரம் அருகே வந்தபோது, மாடு ஒன்று சாலை நடுவே திடீரென குறுக்கே வந்ததால், ஆட்டோ நிலைதடுமாறிக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இச்சம்பவத்தில் வரிச்சூர் பகுதியைச் சேர்ந்த வெள்ளைச்சாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயங்களுடன் ஓட்டுநர் குருநாதன், ஏழு பெண்கள் உட்பட அனைவரையும் மீட்டப் பொதுமக்கள், அரசு இராசாசி மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இச்சாலை விபத்து குறித்து தல்லாகுளம் போக்குவரத்து புலனாய்வு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
மேலும், சாலையில் சுற்றித்திரியும் மாடுகளால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. மாநகராட்சி ஊழியரிடம் பலமுறை புகார் அளித்தும் மாடுகளைப் பிடித்துச் செல்லாததுதான், இவ்விபத்துக்குக் காரணம் என அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டினர்.