தமிழ்நாடு அரசின் சார்பில் தனக்கு வழங்கப்பட்ட இலவச வீட்டுமனையில் இருந்து தன்னை வெளியேற்ற மேற்கொள்ளப்பட்டுவரும் நடவடிக்கைக்கு தடை விதிக்கக் கோரி சிவகங்கை ராஜா உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவானது, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி ஆகியோர் அடங்கிய அமர்வின் முன்பாக இன்று (டிச.23) மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், “மனுதாரர் அரசு பள்ளியில் ஆசிரியராக இருக்கிறார். அத்துடன், மனுதாரரின் மகன் அரசு மருத்துவராகப் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், ஏழை எளிய வீடில்லா மக்களுக்கு தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்ட இலவச வீட்டுமனை பட்டாவை அரசு ஊழியர் என்பதை மறைத்து ராஜா பெற்றுள்ளார். இது சட்டப்படி குற்றம்” என வாதிட்டார்.
![இலவசப் பட்டாக்கள் வழங்கப்பட்டதில் நடந்த முறைகேடுகள் குறித்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-mdu-hc-03-free-land-patta-script-7208110_23122020172958_2312f_1608724798_534.png)
அரசுத் தரப்பு வாதத்தைக் கேட்டறிந்த நீதிபதிகள், “ஏழை மக்கள் பயன்பெற வேண்டும் என்ற நோக்கத்தில் தான் இலவசப் பட்டாக்கள் வழங்கப்படுகின்றன.
தமிழ்நாட்டில் வழங்கப்பட்ட அனைத்து இலவசப் பட்டாக்கள் குறித்தும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் விசாரணை மேற்கொள்ள வேண்டும்.
முறைகேடுகள் நடந்திருப்பின் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இந்த விவகாரத்தில் ராஜாவின் மகனுக்கு தெரியாமல், அவரது பெயரில் பட்டா பெறப்பட்டுள்ளது.
ஆகவே, வழக்கில் இருந்து தன்னை விடுவிக்குமாறு அவர் அளித்த மனுவை சிவகங்கை மாவட்ட ஆட்சியர் இரண்டு வாரங்களில் பரிசீலிக்க வேண்டும்” என உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க : தலைமை பொறியாளர் புகழேந்தி நியமனம் ரத்து: உயர் நீதிமன்றம் அதிரடி!