அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக் கல்லூரி பணி நியமனங்களில் நடைபெற்றுள்ள முறைகேடு தொடர்பாக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை விசாரணைக்கு உத்தரவிடக்கோரி ராஜசேகரன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி புகழேந்தி, நாட்டில் லஞ்சம் ஊழலை ஒழிக்கவே ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு சட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த வழக்கில் மனுதாரர் 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 19ஆம் தேதி அனுப்பிய புகாரை விசாரிக்க ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு சட்டப்படி அனுமதி வழங்க 8 மாதம் ஆனது.
இது தொடர்பாக அலுவலர்கள் தாக்கல் செய்த பதில் மனு திருப்தியாக இல்லை. எனவே, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புச் சட்டப்பிரிவு 19 மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவு 197இன் கீழ் ஊழல் புகாரை விசாரிக்க அனுமதி வழங்க தற்போது பின்பற்றப்படும் நடைமுறை என்ன? இரு பிரிவுகளிலும் அரசு அலுவலர்களுக்கு எதிரான ஊழல் புகார் மீது தனிநபர்கள் அனுமதி பெற என்ன நடைமுறை பின்பற்றப்படுகிறது? என்பது தொடர்பாக மாநில ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை ஆணையர், தலைமைச் செயலர் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கை செப்டம்பர் 8ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.