மதுரையில் நாளுக்கு நாள் கரோனா தொற்று பரவலால் பாதிக்கப்படும் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கரோனா பாதிக்கப்பட்டவருக்கு சிகிச்சை வசதிகளை மேலும் அதிகரிக்க, மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
தற்போது மதுரை அரசு மருத்துவமனையில் உள்ள படுக்கைகள் முழுவதும் நிரம்பியுள்ள நிலையில், வேளாண்மை கல்லூரி, தியாகராசர் பொறியியல் கல்லூரி, ரயில்வே மருத்துவமனை உள்ளிட்ட மற்ற இடங்களில் அமைக்கப்பட்ட கரோனா சிறப்பு சிகிச்சை மையங்களிலும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இருப்பினும், கரோனாவால் தினந்தோறும் 300 பேருக்கும் அதிகமாக பாதிப்பு ஏற்பட்டு வருவதால், ஒரிரு நாளில் நோயாளிகள் சிகிச்சை பெறுவதற்கு படுக்கை வசதிகள் இல்லாத நிலை ஏற்பட வாய்ப்பு உள்ளது.
ஆகையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க, தோப்பூர் ஆஸ்டின்பட்டி காசநோய் மருத்துவமனையில் செயற்கை சுவாச வசதியுடன் கூடிய 150 படுக்கை வசதிகள் தற்போது தயார் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும், அதே மருத்துவமனை வளாகத்தில் ஆயிரம் படுக்கை வசதியுடன் கூடிய தற்காலிக அரங்குகள் அமைக்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அந்த இடத்தை மதுரை மாவட்ட கரோனா தொற்று நோய்த் தடுப்பு சிறப்பு அலுவலர் டாக்டர் சந்திரமோகன், மாவட்ட ஆட்சியர் டிஜி.வினய் மற்றும் மருத்துவக் குழுவினர் நேரடியாக சென்று பார்வையிட்டனர்.
இதையும் படிங்க:அடிப்படை வசதிகளின்றி தனிமைப்படுத்தப்பட்ட முகாம்- ராணுவ வீரர்கள் கவலை