சிவகாசியில் உள்ள மனிதவள அமைப்பைச் சேர்ந்த விஜயகுமார், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்திருந்த மனுவில், தமிழ்நாட்டில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீடு திட்டத்தின் கீழ், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பல்வேறு நோய்களுக்கு சிறப்பு சிகிச்சையும், அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டு வருகிறது. இதனால் வறுமைக் கோட்டிற்குக் கீழுள்ள ஏழை மக்கள் பயனடைந்து வருகின்றனர். ஆனால் மன நோய்களுக்கு, முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீடு திட்டத்தில் சிகிச்சை வழங்கப்படவில்லை.
ஆனால் மத்திய அரசின் மருத்துவக் காப்பீடு திட்டத்தில் சிகிச்சை வழங்கப்படுகிறது. எனவே, தமிழ்நாட்டில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீடு திட்டத்தின் கீழ் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் மன நோய்களுக்கும் சிகிச்சை அளிக்க உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனக் கோரியிருந்தார். இம்மனுவை விசாரித்த நீதிபதிகள் சத்யநாராயணன், புகழேந்தி அமர்வு, இது குறித்து தமிழ்நாடு சுகாதாரத்துறை செயலர் பதிலளிக்குமாறு உத்தரவிட்டு அடுத்த விசாரணையை மூன்று வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.