தஞ்சையைச் சேர்ந்த செந்தில்நாதன் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனுவினைத் தாக்கல்செய்திருந்தார்.
அதில், "தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் பழமைவாய்ந்த ஓலைச்சுவடிகள் உள்ளன. இவற்றின் மூலம் தமிழ் பாரம்பரியத்தை இளைய தலைமுறையினர் அறிந்துகொள்ள முடிகிறது. கீழடி அகழாய்வுக்குப் பின்பு பல தனி நபர்கள், ஓலைச்சுவடிகளைப் பொதுமக்களிடமிருந்து சேகரித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறார்கள். இது வர்த்தக ரீதியில் பெரும் லாபத்தைத் தருகிறது" என்று குறிப்பிட்டிருந்தார்.
மேலும் அந்த மனுவில், "ஒரு சில அறக்கட்டளைகள் பெரும் எண்ணிக்கையிலான ஓலைச்சுவடிகளை வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்து, அதை இணையதளம் மூலம் விற்பனை செய்கின்றனர். ஓலைச்சுவடிகளைத் தனி நபர்கள் சேகரித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதைத் தடுக்க நடவடிக்கைக்கோரி அலுவலர்களிடம் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. எனவே பழமைக்குச் சான்றாக விளங்கும் ஓலைச்சுவடிகளைப் பாதுகாக்க தனி வாரியம் அமைக்க உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் துரைசுவாமி, ரவீந்திரன் அமர்வு, இது குறித்து தமிழ் வளர்ச்சித் துறை செயலர், தேசிய தமிழ் கல்வி நிறுவன இயக்குநர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க: பிரதமரைத் தேர்ந்தெடுக்கும் முனைப்பில் மலாய் கிங்!