மதுரை: விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த ராமசுப்பு, சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், "விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே துப்பாக்கி சுடும் பயிற்சி மையம் உள்ளது. இதன் சுற்றுப்பகுதியில் பல கிராமங்கள் அமைந்துள்ளன.
சாம்பல் நிற அணில்கள் சரணாலயமும் உள்ளது. எப்போதும் மக்கள் நடமாட்டம் இருக்கும். இப்பகுதியில் துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்தை சுற்றிலும் சுற்றுச்சுவர் இல்லை. இதனால் மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் துப்பாக்கி குண்டு பாய்ந்து விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்தை சுற்றிலும் அதிக உயரத்திற்கு கான்கிரீட் சுற்றுச்சுவர் அமைக்க உத்தரவிட வேண்டும்" என மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனுவை நேற்று (ஜூன்.9) நீதிபதிகள் பிரகாஷ், ஆனந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தனர். அப்போது, அரசு தரப்பில், மலைப்பகுதியை நோக்கித்தான் பயிற்சி நடக்கிறது. 70 ஆண்டுக்கு மேலாக இந்த பயிற்சி மையம் இயங்குகிறது என தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து பயிற்சி மேற்கொள்ளும் பகுதிக்கும் நெடுஞ்சாலைக்கும் எவ்வளவு தூரம் உள்ளது என்பது குறித்து அளவீடு செய்து புகைப்படத்துடன் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள். விசாரணையை ஜூன் 29க்கு தள்ளி வைத்தனர்.