தென்காசியைச் சேர்ந்த ராஜசேகர பாண்டியன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் பொதுநல மனுத்தாக்கல் செய்தார்.
அதில், 'திருநெல்வேலி முதல் தென்காசி வரை சுமார் 45 கிலோ மீட்டர் தூரம் நான்கு வழிச்சாலை அமைக்க அரசு திட்டமிட்டது. அதற்காக ரூபாய் 412 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதற்கான திட்டம் கடந்த 2018ஆம் ஆண்டு, ஜூலை முதல் 2020 செப்டம்பருக்குள் முடிவடைய வேண்டும். ஆனால், தற்போது வரை நான்கு வழிச் சாலைப் பணிகள் முடிவடையவில்லை. மேலும் திருநெல்வேலி முதல் தென்காசி வரை உள்ள சாலைகளில் ஏராளமான அபாய வளைவுகள் உள்ளன. ரயில்வே தண்டவாளங்களைக் கடந்து செல்லும் சூழல் உள்ளது. நான்குவழிச் சாலைகள் அமைக்க சுமார் 1400 மரங்களை அகற்றி உள்ளனர்.
சாலை ஓரங்களில் உள்ள நிலங்களை தேசிய நெடுஞ்சாலைத்துறை பெற்றுள்ளது. ஆனாலும் இதுவரை பணிகள் நிறைவடையவில்லை. மேலும் தற்போது உள்ள சாலை மழையால் குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைகின்றனர். இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்குப் பலமுறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. எனவே, திருநெல்வேலி முதல் தென்காசி வரை உள்ள மாநில நெடுஞ்சாலையில் சாலையை விரிவுபடுத்தி நான்கு வழிச்சாலையாக அமைக்க உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்' என தனது மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ், ஆனந்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனு குறித்து நெடுஞ்சாலைத்துறைச் செயலர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை பிப்ரவரி 18ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: பேரறிவாளன் விடுதலையில் ஆளுநரே முடிவு எடுப்பார்: மத்திய அரசு