மதுரை: கன்னியாகுமரி மாவட்டம் கீழையூர் பகுதியை சேர்ந்த டெலஸ் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அந்த மனுவில், "கன்னியாகுமரி மாவட்டம் அரபிக்கடல் கடற்கரையிலுள்ள இரவிபுத்தன்துறை பகுதியில் 450 மீனவக் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இதன் அருகேயுள்ள தேங்காய்பட்டினம் கிராமத்தில், 2009ஆம் ஆண்டு மீனவர்களுக்கான மீன்பிடித் துறைமுகம் கட்டப்பட்டது. கரோனா நோய்த் தொற்று காரணமாக இந்த மீன்பிடித்துறைமுகம் கடந்த ஏப்ரல் மாதம் மூடப்பட்டது.
கனரக வாகனத்தில் வருதல்
இதனால், அருகிலுள்ள எட்டு கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள், இரவிபுத்தன்துறை பகுதியில், பெரிய படகுகளை கொண்டு வந்து நிறுத்தி வருகின்றனர். இம்மீனவர்களிடம் மீன்கள் வாங்க வரும் வியாபாரிகள், இரவிபுத்தன்துறை பகுதிவழியாக, கனரக வாகனங்களில் வந்து செல்கின்றனர்.
வீடுகள் சேதம்
தற்போது தேங்காய்பட்டினம் துறைமுகம் திறந்ததற்கு பின்பும், இரவிபுத்தன்துறை பகுதியிலேயே அதிகமானவர்கள் தங்களின் பெரிய படகுகளை நிறுத்தி வருகின்றனர். இந்த கடற்கரைக்கு செல்லும் பகுதி குறுகிய சாலையாக இருப்பதால், அதில் செல்லும் கனரக வாகனங்களால், இங்குள்ள வீடுகள் சேதம் அடையும் நிலை ஏற்பட்டுள்ளது.
அதிக கடல் சீற்றம்
இப்பகுதியில், பெரிய படகுகளை நிறுத்துவதற்காக, சிலர் கடலை ஆழப்படுத்தும் வேலையில் ஈடுபடுகின்றனர். இப்பகுதியில் ஏற்கனவே அலைகளின் சீற்றம் அதிகமாக இருப்பதால் வீடுகளுக்குள் கடல்நீர் புகுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. எனவே, இரவிபுத்தன்துறை கடல் பகுதியில் தூண்டில்வளைவு அமைக்கவும், கனரக வாகனங்கள் வருவதை தடை செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார்.
ஆட்சியர் பதிலளிக்க உத்தரவு
இந்த மனு, நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி ஆகியோர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், தேங்காய்ப்பட்டினம் துறைமுகம் மூடப்பட்டதன் காரணமாக இரவிபுத்தன்துறை பகுதியில் கனரக வாகனங்கள் அதிக அளவில் செல்வதால் வீடுகள் சேதம் அடைவதாக தெரிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து நீதிபதிகள், கனரக வாகனங்கள் செல்வதற்கு மாற்று ஏற்பாடுகள் ஏதேனும் செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்து மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை டிசம்பர் 21ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க: காவலர்கள் போராட முடியாது என்பதால் இந்த காலதாமதமா? அரசை எச்சரித்த நீதிபதிகள்