தஞ்சை கும்பகோணத்தைச் சேர்ந்தவர் புதியராஜா. இவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார்.
அதில், "கும்பகோணம் கோயில் நகரமாக அறியப்படுகிறது. மகாமகம் விழாவை ஒட்டி ஏராளமான மக்களை தன்பால் ஈர்க்கும் கும்பகோணம், ஒரு லட்சத்து 40 ஆயிரத்து 256 என்னும் கணிசமான மக்கள் தொகையோடு உள்ளது. காவல் துணை கண்காணிப்பாளர் தலைமையில் கும்பகோணத்தில் சட்டம் ஒழுங்கு பேணப்பட்டுவருகிறது" என்று குறிப்பிட்டிருந்தார்.
மேலும் அந்த மனுவில், "தனி மாவட்டமாக அறிவிக்கப்படுவதற்குத் தேவையான அனைத்து வசதிகளையும் கும்பகோணம் பெற்றுள்ளது. கும்பகோணத்தை தனி மாவட்டமாக அறிவிக்கக் கோரி அலுவலர்களிடம் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. ஆகவே கும்பகோணத்தை தனி மாவட்டமாக அறிவித்து உத்தரவிட வேண்டும்" எனவும் கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் துரைசுவாமி, ரவீந்திரன் அமர்வு, "புதிய மாவட்டத்தை உருவாக்குவது தொடர்பான விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட இயலாது" எனத் தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து, மனுதாரர் வழக்கை திரும்பப் பெறுவதாகத் தெரிவித்தார். அதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் வழக்கைத் தள்ளுபடிசெய்து உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: பிரதமரைத் தேர்ந்தெடுக்கும் முனைப்பில் மலாய் கிங்!