மதுரை: டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு விண்ணப்பிக்க ஆதார் எண் கட்டாயம் என்ற அறிவிப்புக்குத் தடைவிதிக்கக் கோரிய மனுவுக்கு டிஎன்பிஎஸ்சியிடம் தகவல் கேட்டு தெரிவிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மதுரையைச் சேர்ந்த ஜானகி, உயர் நீதிமன்றம் மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில், "டிஎன்பிஎஸ்சி (தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்) சார்பில் அரசு குற்றவியல் வழக்கறிஞர் பணித் தேர்வு தொடர்பாக ஆகஸ்ட் 25இல் அறிவிப்பாணை வெளியிடப்பட்டது.
தற்போது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தேர்வுக்கு ஆன்லைன் மூலம் ஒருமுறை பதிவு செய்துகொண்டவர்களுக்கு வழங்கப்பட்ட அடையாள எண்ணைக் கொண்டு அனைத்துத் தேர்வுக்கும் விண்ணப்பிக்கலாம்.
அரசு குற்றவியல் வழக்கறிஞர் நியமனத் தேர்வுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளத்தில் விண்ணப்பிக்க முயன்றால், விண்ணப்பதாரரின் ஆதார் எண் கேட்கிறது. ஆதார் எண் கொடுக்காவிட்டால் தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாத நிலை உள்ளது.
போட்டித் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கவும், தேர்வு எழுதவும் ஆதார் எண் கட்டாயம் இல்லை என உச்ச நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை மீறி தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தேர்வுக்கு ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
எனவே தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஆதார் எண் கட்டாயம் என்ற அறிவிப்பாணையை செயல்படுத்த இடைக்கால தடை விதித்து உத்தரவிட வேண்டும்" என்று கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் எம். துரைசாமி, கே. முரளிசங்கர் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் முன்னிலையான வழக்கறிஞர், "தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஒருமுறை பதிவில் ஆதார் எண் பதிவுசெய்து 10 நாள்களுக்கு மேல் ஆகியும் தற்போது வரை பதிவேற்றம் ஆகவில்லை. ஒரு வாரத்தில் அரசு குற்றவியல் வழக்கறிஞர் நியமன தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி முடிகிறது" என்றார்.
இதையடுத்து, மனு தொடர்பாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்திடம் உரிய விளக்கம் பெற்று நீதிமன்றத்துக்குத் தெரிவிக்க அரசு வழக்கறிஞருக்கு உத்தரவிட்டு விசாரணையை செப்டம்பர் 23ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.