மதுரை: சிவகாசி எரிச்சநத்தத்தைச் சேர்ந்த சூசை மாணிக்கம், உயர் நீதிமன்றம் மதுரைக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல்செய்திருந்தார்.
அதில், "பர்மாவில் அதிகளவில் தமிழர்கள் வசித்தனர். இவர்களில் பலர் 1960இல் தாயகம் திரும்பினர். இவர்களுக்கு விருதுநகர் மாவட்டம் எரிச்சநத்தம், செவலூர், புதுக்கோட்டை ஆகிய இடங்களில் நிலம் வழங்கப்பட்டது.
அந்த இடத்தில் பர்மாவிலிருந்து திரும்பியவர்கள் தனித்தனியே வீடுகள் கட்டி குடியேறினர். எனது தந்தை 3 சென்ட் இடத்தில் வீடு கட்டினார். இதற்கான பட்டாவும் உள்ளது.
இந்நிலையில் எரிச்சநத்தம் ஊராட்சித் தலைவர் எங்களை அங்கிருந்து காலி செய்ய நடவடிக்கை எடுத்துவருகிறார். அந்த இடத்தில் தொகுப்பு வீடுகள் திட்டத்தை நடைமுறைப்படுத்த அரசு அலுவலர்கள் முடிவுசெய்துள்ளனர்.
இது தாயகம் திரும்பியவர்களுக்கான அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது. எனவே, எரிச்சநத்தத்தில் குடியிருக்கும் தாயகம் திரும்பியவர்களை வெளியேற்றத் தடைவிதிக்க வேண்டும்" என்று கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் எம். துரைசாமி, கே. முரளிசங்கர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனு தொடர்பாக விருதுநகர் ஆட்சியர் பதில் அளிக்க உத்தரவிட்டு விசாரணையை இரண்டு வாரங்களுக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.