மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே மேலவடம்போக்கி தெருவில் உள்ள வாசுதேவன் என்பவருக்கு சொந்தமான சுமார் 50 ஆண்டுகள் பழமையான இரண்டடுக்கு கட்டடத்தை புதுப்பிக்கும் பணி நடைபெற்றது. நேற்று கட்டடத்தை இடிக்கும்போது அப்பணியில் ஈடுபட்டிருந்த ராமர், சந்திரன், ஜெயராமன் ஆகிய 3 பேர் கட்டட இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தனர்.
இறந்தவர்களின் உடல்கள் அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு உடல் கூராய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டு இன்று உடல் கூராய்வு முடிவுற்றது. இந்நிலையில், இறந்தவர்களின் உறவினர்கள் சம்பந்தப்பட்ட பொறியாளரை கைது செய்யவும், தமிழ்நாடு அரசும் பொறியாளரும் இணைந்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு இழப்பீடு மற்றும் அரசு பணி வழங்க கோரியும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை முன்பு மறியலில் ஈடுபட்டனர்.
இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகத்தின் சார்பிலும், காவல்துறையினரும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதுவரை எந்த முடிவும் எட்டப்படாத நிலையில் மாலை 5 மணிமுதல் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் உடலை வாங்க மறுத்து மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். நீதி கிடைக்கும் வரை உடலை வாங்க மாட்டோம் இங்கிருந்து கலைந்து போக மாட்டோம் என்றனர். இரண்டு மணி நேரத்திற்கு மேலாக மறியல் நடைபெற்று வருவதால் இந்த பகுதியில் பெரும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சரக்குப் போக்குவரத்தில் மதுரை ரயில்வே கோட்டம் சாதனை!