மதுரை மாவட்டம், சோலையழகுபுரத்தைச் சேர்ந்தவர் பாலமுருகன். இவரை கடத்தல் வழக்கின் விசாரணைக்காக, அவனியாபுரம் காவல்துறையினர் அழைத்து சென்றனர்.
காவலர்கள் அடித்து துன்புறுத்தியதால் தான் பாலமுருகன் மரணமடைந்தார். எனவே, உடற்கூராய்வை வீடியோ பதிவு செய்வதோடு, நீதிபதி ஒருவர் விசாரித்து உரிய இழப்பீடு வழங்கக் கோரி, பாலமுருகனின் தந்தை முத்துக்கருப்பன் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுதாக்கல் செய்திருந்தார்.
விசாரணை நிலுவையில் இருந்த போது, முத்துகருப்பன் தனது மனுவை வாபஸ் பெற்றார். இந்த சம்பவம் குறித்து வழக்கறிஞர் ஹென்றி டிபேன், உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நிர்வாக நீதிபதிக்கு கடிதம் எழுதியிருந்தார்.
அதில், காவல்துறையினரின் அச்சுறுத்தல் காரணமாக, முத்து கருப்பன் மனுவை வாபஸ் பெற்றதாகக் கூறியிருந்தார்.
இதனடிப்படையில், உயர் நீதிமன்ற மதுரைக் கிளை பதிவாளர் தரப்பில் தாமாக முன்வந்து பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில், பாலமுருகன் சந்தேகத்துக்கிடமான முறையில் மரணமடைந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு இன்று(ஜூன்.14) நீதிபதிகள் சிவஞானம், ஆனந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
அப்போது வழக்கறிஞர் ஹென்றி டிபேன் இந்த வழக்கைத் தொடர்ந்து உயர் நீதிமன்றம் கண்காணிக்க வேண்டும் என தெரிவித்தார்.
இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், வழக்கின் தற்போதைய நிலை குறித்து சிபிசிஐடி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை இரண்டு வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க:சிறைக்கைதியின் உடலை வாங்க வேண்டும் - உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு