மதுரை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை அவனியாபுரத்தில் இன்று (ஜனவரி 14) ஜல்லிக்கட்டுத் திருவிழா, கரோனா கட்டுப்பாடு காரணமாக தமிழ்நாடு அரசு விதித்த பல்வேறு நிபந்தனைகளுக்குள்பட்டு நடைபெற்றது. காலை 7 மணிக்குத் தொடங்கி மாலை 5 மணி வரை ஏழு சுற்றுகளாகப் போட்டிகள் நடைபெற்றன.
இதில் மொத்தம் 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். 624 காளைகள் ஜல்லிக்கட்டில் பங்கேற்றன. 40-க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில், போட்டியைக் காணவந்த அவனியாபுரத்தைச் சேர்ந்த சிறுவன் பாலமுருகன் மாடு முட்டியதில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
வீரருக்கு கார் பரிசு
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு அமைச்சர்கள் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், மூர்த்தி, மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் ராஜன் செல்லப்பா, பூமிநாதன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
அவனியாபுரத்தைச் சேர்ந்த கார்த்திக் 24 காளைகளைப் பிடித்து முதலிடம் பெற்றார். அவருக்கு அடுத்தபடியாக வலையங்குளத்தைச் சேர்ந்த முருகன் 19 காளைகளையும், விளாங்குடியைச் சேர்ந்த பரத்குமார் 11 காளைகளைப் பிடித்து மூன்றாவது இடத்தையும் பெற்றார்.
முதலிடம் பெற்ற முருகனுக்கு சேப்பாக்கம் தொகுதியைச் சேர்ந்த திமுக சட்டப்பேரவை உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் சார்பாக கார் பரிசாக வழங்கப்பட்டது.
காளைக்கு கார் வழங்கிய முதலமைச்சர்
அதேபோன்று மணப்பாறை தேவசகாயத்தின் காளை சிறந்த காளைக்கான முதல் பரிசையும், அவனியாபுரம் ராமுவின் காளை 2ஆவது பரிசையும், அவனியாபுரம் பிரதீஷ் காளை 3ஆவது பரிசையும் வென்றன.
சிறந்த காளைக்கான முதல் பரிசைப் பெறும் மணப்பாறை தேவசகாயத்தின் காளைக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சார்பாக கார் பரிசாக வழங்கப்பட்டது.
இதையும் படிங்க: கரோனா தொற்றுக்கு பொங்கலோ பொங்கல்