தேனி: பெரியகுளம் வட்டம், கெங்குவார்பட்டி, சூசையப்பர் கிராமத்தில் குடியிருந்து வருபவர் செல்வம். இவரது மகன் ரிசாத் ராஜ். இவரை ஏப். 3ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அன்று அதிகாலை சுமார் 4 மணியளவில் தேவதானப்பட்டி காவல் நிலையத்தைச் சேர்ந்த காவலர்கள் சுப்பிரமணி, அமர்நாத், காவல் ஆய்வாளர் ராஜசேகரன் ஆகியோர் விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது.
ஒருநாள் முழுவதும் காவல் நிலையத்தில் வைத்த காவல் துறையினர், அவரை சாதியின் பெயரால் துன்புறுத்தி சித்ரவதை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட ரிசாத் ராஜ் தந்தை செல்வத்துடன், மக்கள் கண்காணிப்பகம் நிர்வாக இயக்குநர் ஹென்றி திபேன், மாநில மனித உரிமைகள் ஆணைய தலைவர் நீதிபதி ஜெயச்சந்திரனை மதுரையில் உள்ள விருந்தினர் மாளிகையில் சந்தித்து மனு அளித்தார்.
அதன் பிறகு, செய்தியாளர்களைச் சந்தித்த ஹென்றி திபேன், "கடந்த 2017ஆம் ஆண்டு மங்கையர்க்கரசி என்ற ஒரு பெண், தன்னுடைய கணவருக்கு நிகழ்ந்த மனித உரிமை மீறல் தொடர்பாக மாநில மனித உரிமை ஆணையத்திற்கு புகார் ஒன்றை அளிக்கிறார். அந்தப் புகார் நிலுவையில் உள்ளது. அந்தப் புகார் கொடுத்ததன் காரணமாக, மங்கையர்க்கரசியின் கணவர் மற்றும் மகன் மீது பல்வேறு பிரிவுகளின்கீழ் 2017ஆம் ஆண்டிலிருந்து 2022ஆம் ஆண்டு வரை ஏழெட்டு வழக்குகள் வெவ்வேறு காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த வழக்கின் எதிரியும், சார்பு ஆய்வாளராகவும் பணியாற்றிய வெங்கடேஷ் பிரபுவின் உறவினர் ராஜசேகர் தற்போது தேவதானப்பட்டி காவல் நிலையத்தில் ஆய்வாளராகப் பணியாற்றி வருகிறார். பொறுப்பேற்றதும், இன்று வாய்தா உள்ளது என்று தெரிந்தும் மங்கையர்க்கரசின் மகனை காவல் நிலைய விசாரணைக்கு கடந்த ஏப்ரல் 3ஆம் தேதி அழைத்துச் சென்றார்.
இந்த விசாரணையில், சொல்ல முடியாத அளவிற்கு மங்கையர்க்கரசியின் மகன் சித்திரவதைக்கு உள்ளாக்கப்படுகிறார். ஏப்ரல் 5ஆம் இரவு வரை துன்புறுத்தப்பட்டு அன்றிரவு 11 மணிக்கு நீதித்துறை நடுவர் முன்பு ஆஜர்படுத்துகின்ற நேரத்தில், மங்கையர்க்கரசி தரப்பு வழக்கறிஞர் வாதத்தின் அடிப்படையில் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார். அங்கு ஒரே நாள் சிகிச்சை அளித்துவிட்டு மீண்டும் நீதித்துறை விசாரணைக்கு அனுப்பப்பட்டுள்ளார். அப்படியே சாத்தான்குளம் சம்பவம் அங்கே மீண்டும் அரங்கேற்றப்பட்டுள்ளது” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "காவலர்கள் அடித்த அடியில் உடம்பில் ஏற்பட்ட காயங்கள் போக, சிறுநீர் கழிக்கும்போது ரத்தம் வருகிறது. அந்த அளவிற்கு மிகக் கொடூரமாக ரிசாத் தாக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து உடனடியாக தென்மண்டல காவல் துறைத் தலைவரின் கவனத்திற்கு நாங்கள் கொண்டு சென்றோம். இதன் தொடர்ச்சியாக அவரும் நடவடிக்கை எடுத்திருப்பார் என நம்புகிறேன். தேனி மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர், மனுதாரர் வீட்டிற்குச் சென்று சமரசம் பேசியுள்ளார்.
இந்த வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் 24 மணி நேரத்திற்குள் கொண்டு வருமாறு வலியுறுத்தியுள்ளோம். மேலும், உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி அக்குறிப்பிட்ட காவல் நிலையத்தில் உள்ள சிசிடிவி காட்சிப்பதிவுகளையும் கேட்டுள்ளோம். அதேபோன்று, மருத்துவ சிகிச்சை மேற்கொண்ட விவரங்களையும் வழங்குமாறு கோரியுள்ளோம். இந்த வழக்கில் மனித உரிமை மீறல்கள் நடைபெற்றிருந்தால் தேனி மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
ஒருவேளை, பிணையில் வெளியே விடப்பட்டால், சாட்சியங்களுக்கான சட்டத்தின் அடிப்படையில் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். இந்த வழக்கை சரியான முறையில் காவல் துறையினர் நடத்தி மாநில உரிமைகள் ஆணையத்தை மதிப்பவர்கள் என்பதை நிரூபிக்க வேண்டும். மனு கொடுக்க வருகின்ற நாள் அன்றே மதுரை சமயநல்லூர் காவல் நிலையத்தில் நிறுத்தி வைக்கிறார்கள் என்றால், இதைவிட கேவலம் வேறு என்ன இருக்க முடியும்..?
சாத்தான்குளம் சம்பவத்திற்குப் பிறகு தமிழ்நாட்டில் பொறுப்பேற்றுள்ள திமுக அரசு, அதுதொடர்பாக பல நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதற்கு இந்த வழக்கும் ஒரு எடுத்துக்காட்டாகும். எங்களிடம் உள்ள உரிய ஆதாரங்களை நீதிபதியிடம் நாங்கள் சமர்ப்பித்துள்ளோம். அவர்களிடம் உள்ள ஆவணங்களை உடனடியாக எங்களுக்கு வழங்க வேண்டும் என்பதுதான் எங்களின் கோரிக்கை” என்றார்.
இதையும் படிங்க: சென்னை ஐஐடி பட்டியல் இன மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு; சிபிசிஐடிக்கு மாற்ற கோரிக்கை