மதுரையில் பழமை வாய்ந்த கலைப் பொருள்களை தேடிக் கண்டறிந்து ஆவணப்படுத்தும் நோக்கில், மாவட்ட தொல்லியல் ஆய்வு சங்கத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் தேவி அறிவுச்செல்வம், சசிகலா ஆகியோர் பல்வேறு இடங்களில் ஆய்வு செய்து வருகின்றனர். அதில், மதுரை தெற்குவாசல் பகுதியில் நடுகல் வீரன் எனப் போற்றப்படும் முல்லைத்திணை தெய்வம் கருப்பசாமி சிலையை கண்டுபிடித்து ஆவணப்படுத்தியுள்ளனர்.
இதுகுறித்து அவர்கள், "மதுரை தெற்குவாசலில் நடுகல் வீரனாக கருதப்படும் கருப்பசாமி சிலை புதிதாகக் கண்டறியப்பட்டுள்ளது. காவல் தெய்வமாக கருதப்படும் கருப்பசாமி, வீரம் செறிந்த, வலிமை வாய்ந்த, போர்க்குணம் மிக்க சிறுதெய்வமாகும். இந்த தெய்வம் தமிழ்நாட்டில் உள்ள காவல் தெய்வங்களில் அதிக எண்ணிக்கையில் வழிபடப்பட்டு வருகிறது.
சங்க இலக்கியங்கள் குறிப்பிடும் ஐந்திணைகளில், பாண்டியநாட்டில் அதிகப்படியான காடும் காடு சார்ந்த பகுதிகள் முல்லைத் திணை பகுதிகள் என்றழைக்கப்படும். அப்பகுதிகளில், ஆநிரை மேய்த்தலும், காத்தலும், கால்நடை வணிகமுமே முக்கியத் தொழிலாகும். அப்படி கால்நடைகளை பகைவர்களிடம் இருந்து காக்கும் வீரர்கள் கருப்பசாமிகள் எனக் கருதப்பட்டனர். நாளடைவில் அவர்கள் குலதெய்வங்களாக கருதப்பட்டு வழிபடப்பட்டு வருகின்றனர்" எனத் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: கொலையுண்ட தொழிலாளி: நீதிக்கேட்டு உறவினர்கள் போராட்டம்!