பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் மதுரை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், "தற்போது இயற்கை பேரிடர் காரணமாக கேரளாவில் 80 பேர்,கர்நாடகாவில் 40பேர் தமிழ்நாட்டில் சிலர் உயிரிழந்துள்ளனர். காலநிலை மாற்றத்தின் விளைவாக இத்தகைய உயிரிழப்புகள் நிகழ்கின்றன.
காலநிலை மாற்றத்தைப் புரிந்து கொண்டு உலகநாடுகள் திட்டங்களை வகுத்து செயல்பட்டுவருகின்றன. அதே போல மத்திய, மாநில அரசுகள் திட்டம் வகுத்து உயிரிழப்புகளைத் தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கர்நாடக அணைகளில் இருந்து உபரி நீர்தான் நமக்கு திறந்துவிடப்படுகிறது.
அதுவும் குறிப்பிட்ட சிலநாட்களிலேயேஎ அதிகப்படியான நீரை திறந்துவிடுவதால் அவற்றை தேக்க முடியாமல் அந்நீர் வீணாக கடலில் கலக்கிறது. ஆகையால் காவிரி ஆற்றில் ஒவ்வொரு ஐந்து கிலோ மீட்டருக்கும் தடுப்பணைகள் கட்டவேண்டும்.
மேலும் காவிரி டெல்டா பகுதிகளில் உள்ள ஐந்து மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட மண்டலமாக அறிவித்து சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும். அவ்வாறு அறிவித்தால் ஹைட்ரோகார்பன் உள்ளிட்ட திட்டங்களை அங்கு செயல்படுத்த முடியாது" என்றார்.