'அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல், ஆலயம் பதினாயிரம் நாட்டல், பின்னருள்ள தருமங்கள் யாவும், பெயர் விளங்கி ஒளிர நிறுத்தல், அன்னயாவினும் புண்ணியங் கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்' என்ற பாரதியாரின் கவிதை வரிகளுக்கு உயிர் கொடுக்கும் விதமாய் திருப்பாச்சேத்தி அரசு மேல்நிலைப்பள்ளியின் முன்னாள் மாணவர்கள் ஒன்றிணைந்து தங்களின் பள்ளியை சீரமைத்து சாதித்துக் காட்டியுள்ளனர்.
திருப்பாச்சேத்தியைச் சுற்றியுள்ள இருபதுக்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மாணவ, மாணவியருக்கு கல்வி வாய்ப்பை நல்கிய இந்தப் பள்ளி, சில மாதங்கள் முன்பு வரை சீண்டுவாரின்றி சிதிலமடைந்து கிடந்தது. தாங்கள் பயின்ற பள்ளி வளாகம், இவ்வாறு கிடப்பதை தாங்கிக் கொள்ள முடியாத முன்னாள் மாணவர்கள், வாட்ஸப் குழு ஒன்றை ஏற்படுத்தி, அங்கு படித்த ஒவ்வொரு மாணவ, மாணவியரையும் தேடிக் கண்டடைந்து, தற்போது 200-க்கும் மேற்பட்டோரின் பேருதவியால் ரூ.30 லட்சம் செலவில், தங்களின் 'ஆலயத்தை' புதுப்பித்து வருகின்றனர். கரோனா காலத்துக்குப் பிறகு 'குடமுழுக்கு' காணவிருக்கிறது எனப் பூரிக்கின்றனர்.
பள்ளியின் தலைமையாசிரியர் மேரி வசந்தி, "இந்த மாவட்டத்திலேயே மிகவும் பின்தங்கிய பகுதி திருப்பாச்சேத்திதான். ஆகையால் இங்குள்ள மாணவ, மாணவியரின் கல்விக்கான விடிவெள்ளி இந்தப் பள்ளிதான். 1500 மாணவ, மாணவியர் என்ற எண்ணிக்கையில் ஒரு காலத்தில் இயங்கினாலும், தற்போது மாணாக்கர்களின் எண்ணிக்கை வெறும் 650 ஆகக் குறைந்துவிட்டது. அடிப்படைக் கட்டமைப்பு வசதிக் குறைவே இதற்கு காரணம்" என்கிறார்.
கடந்த 1960, சார்வரி ஆண்டில் துவங்கி வைக்கப்பட்ட இப்பள்ளி, 60 ஆண்டுகளுக்குப் பிறகு அதே சார்வரி ஆண்டில் முன்னாள் மாணவர்களால் புதுப்பொலிவு பெறுவதுதான் வியப்பிலும் வியப்பு. பள்ளி வளாகம் முழுவதும் மரங்கள் சூழ காட்சியளித்தாலும், போதுமான வசதிகள் இன்மையால், மாணவர் சேர்க்கை காலப்போக்கில் மிகவும் குறைந்துபோனதுதான் கொடுமையிலும் கொடுமை.
அமெரிக்காவில் பணியாற்றி வரும் இப்பள்ளியின் முன்னாள் மாணவர் சிவநாதன் கூறுகையில், 'நாங்கள் படித்த காலத்தில் வசதிக் குறைவோடுதான் பயின்றோம். அந்த நிலை வருங்காலத் தலைமுறைக்கு வரக்கூடாது என்பதற்காகவே தற்போது முன்னாள் மாணவர்கள் நாங்கள் ஒருங்கிணைந்துள்ளோம்' என்கிறார். உடைந்த ஓடு, பறவைகளின் எச்சம், மழை வந்தால் ஒண்டுவதற்குக்கூட வழியில்லாத நிலை, கழிப்பறை வசதியின்மை என பல்வேறு குறைபாடுகளோடு படித்துச் சென்ற மாணவர்கள் அனைவரும், பொறியாளர்கள், அரசு அலுவலர்கள், தொழிலதிபர்கள், ஆசிரியர்கள் என பல்வேறு முக்கியப் பொறுப்புகளில் தற்போது பணியாற்றி வருகின்றனர்.
தமிழாசிரியையாகப் பணியாற்றி வரும் முன்னாள் மாணவி பானுமதி கூறுகையில், "நாங்கள் பயின்ற பள்ளிக்கூடம்தான் இப்படி மாறியுள்ளதா என நாங்களே வியக்கும் அளவிற்கு பள்ளியின் தோற்றத்தையே மாற்றியுள்ளோம் என்பது எங்களுக்குப் பெருமையாக உள்ளது' என்கிறார். சிதிலமடைந்து கிடந்த சுவர்கள் சீரமைப்பு, நேர்த்தியான வண்ணப்பூச்சு, கரும்பலகை, இருக்கை, தரைத்தளப் பூச்சு, கழிப்பறை சீர்படுத்தல் என பல்வேறு பணிகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பாகத் துவங்கி தற்போது வரை நடைபெற்று வருகிறது. மேலும் பள்ளியை பல்வேறு நவீனமான வசதிகளோடு உருவாக்க வேண்டும் என்ற கனவும் அவர்களிடம் விரிந்து கிடக்கிறது.
'லேப்டாப் இல்லை... போன் இல்லை... டிவி இல்லை... இருந்தாலும் படிக்கிறோம்'
ஐடி என்ஜினியராகப் பணியாற்றி வரும் கௌசல்யா கூறுகையில், "இங்குள்ள ஆசிரியர்கள் ஒவ்வொருவரும் எனது தற்போதைய வளர்ச்சிக்கு முக்கியக் காரணமானவர்கள். அவர்கள் இல்லாவிட்டால் தற்போதைய 'நான்' இல்லை என்பதுதான் உண்மை" என்கிறார் பெருமையோடு... பெங்களூருவில் மென்பொருள் வல்லுநராகப் பணியாற்றும் காமேஸ்வரன் கூறுகையில், "இந்தப் பகுதியைச் சுற்றியுள்ள பல்வேறு ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த மாணவ, மாணவியருக்கு கல்வி புகட்டிய திருக்கோயில் இந்தப் பள்ளி" என்று கூறும்போது அவரது கண்களில் பெருமிதம் மிளிர்கிறது.
ஐயங்கள் கேட்டு வருகின்ற மாணவ, மாணவியருக்கு அறிவு புகட்டுவதற்காகவே கரோனா காலத்திலும் ஆசிரியர்கள் நாள்தோறும் அர்ப்பணிப்பு உணர்வுடன் வருகை தருகிறார்கள். அதேபோன்று போட்டித் தேர்வுகளுக்குப் படிக்கும் மாணவர்கள் இந்தப் பள்ளி வளாகத்தில் அமர்ந்து ஆங்காங்கே படித்துக் கொண்டிருக்கிறார்கள். முன்னாள் மாணவியும் தற்போது ஆசிரியையுமான செல்வி கூறுகையில், "இங்கு பயின்ற அனைத்து மாணவர்களையும் ஒருவர்விடாமல் ஒருங்கிணைந்தால் மேலும் பல நல்ல செயல்களை நாம் செய்ய முடியும். இதனையே வேண்டுகோளாக ஏற்றுக் கொண்டு இணைய வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்" என்றார்.
முன்னாள் மாணவர்களை ஒருங்கிணைப்பது என்பது பெரும்பணியாக உள்ள நிலையில், அதனை சிரமேற்கொண்டு செய்து சாதித்துக் காட்டிய இப்பள்ளியின் முன்னாள் மாணவரும், தற்போது அதே பள்ளியின் தொழிற்கல்வி ஆசிரியருமான ராமநாதன் கூறுகையில், 'பள்ளி வைரவிழா கடந்த 2019-ஆம் ஆண்டு கொண்டாடப்பட்டபோதுதான் இந்த சிந்தனை எழுந்தது. கடந்த ஓராண்டிற்கு முன்பாக கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. பள்ளியைச் சீரமைக்கும் இந்தப் பணிக்காக, முன்னாள் மாணவர்களை கொஞ்சம் கொஞ்சமாக ஒருங்கிணைத்தோம். தங்களால் இயன்றவரை பண உதவி செய்துள்ளார்கள்' என்கிறார்.
ஏழை எளிய மாணவர்களின் கல்விக் கனவு, முன்னாள் மாணவர்களின் தயாள சிந்தையிலும் கொடைத்தன்மையிலும்தான் உள்ளது என்பதில் ஐயமில்லை. நவீனத்தின் உச்சத்திலுள்ள அனைத்து வகையான கல்வியும் தங்களின் கிராமத்து மாணவர்களுக்கும் கிடைக்க வேண்டும் என்ற வேட்கையும், ஆவலும் இவர்களிடம் தீராத வகையில் சுரந்து கொண்டேயிருக்கிறது. எந்நேரமும் தங்களின் கல்விக்கூடத்தைப் பற்றியே சிந்திக்கின்ற இந்த முன்னாள் மாணவர்களால், ஈடேறாத கனவென்று ஒன்று இருக்குமா என்ன..? வெற்றி நிச்சயம் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை...