தென்மாவட்டங்களில் கரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்றுமுன்தினம்(ஆக.6) சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
அதன்படி மதுரை வந்த அவர், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொழில்துறை, விவசாயத் துறை, சுய உதவி குழு பிரதிநிதிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "இ-பாஸ் நடைமுறை காரணமாக தமிழ்நாட்டில் கரோனா பரவல் குறைந்துள்ளது.
இ-பாஸ் வழங்குவதில் ஊழல் ஏற்படக்கூடாது என்பதற்காக ஏற்கனவே மாவட்ட வாரியாக உள்ள குழுக்களுடன் கூடுதலாக ஒவ்வொரு குழு அமைக்கப்பட்டுள்ளது.
வெளிமாவட்ட தொழிற்சாலை, நிறுவனங்களில் வேலைபார்க்கும் பணியாளர்கள் ஒரு மாதத்திற்கு தேவையான இ-பாஸ்களை மாவட்ட ஆட்சியர் மூலம் பெற்றுக்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.
மேலும் அவர், "சித்த மருத்துவத்திற்கு என்று தனி அமைச்சகம் அவசியமில்லை. சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சிறப்பான பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
தென்மாவட்டங்களில் தொழில் தொடங்க வரும் நிறுவனங்களுக்கு அதிக சலுகைகள் வழங்கப்படும்" எனத் தெரிவித்தார்.
நிறைவாக அவர், "கரோனா உயிரிழப்புகளை மறைக்க வேண்டிய அவசியம் இல்லை. எதிர்க்கட்சிகள் இதுகுறித்து உண்மையை பேசுவதில்லை. இக்கட்டான காலகட்டங்களிலும் அரசை குற்றம்சாட்டுகின்றனர்.
அமெரிக்காவில் பரிசோதனை முடிவுகள் மூன்று நாள்களுக்குப் பிறகுதான் வெளியிடப்படுகின்றன. ஆனால் தமிழ்நாட்டில் 24 மணி நேரத்தில் பரிசோதனை முடிவுகள் வெளியிடப்படுகின்றன. எதிர்க்கட்சிகள் என்ன வேண்டுமானாலும் பேசலாம், ஆளுகின்ற கட்சிக்கு பொறுப்புணர்வு உண்டு" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: 'இ-பாஸ் முறையை ரத்து செய்ய மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்!