'வடகிழக்கு பருவ மழையால் உயிர்சேதம் ஏற்படாத வகையில் நடவடிக்கை' - ஆர்.பி. உதயகுமார் - வடகிழக்கு பருவ மழை
மதுரை: வடகிழக்கு பருவமழையால் தமிழ்நாட்டில் எந்தவொரு பொருள்கள், உயிர் சேதம் ஏற்படாத வண்ணம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.
மதுரை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் கூடுதலாக ரூ. 30 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் கட்டடத்தை, வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், ஆட்சியர் அன்பழகன், சட்டப்பேரவை உறுப்பினர் ராஜன் செல்லப்பா ஆகியோர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.
அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், மதுரையில் ரூ. 30 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் கூடுதல் ஆட்சியர் கட்டடத்தை விரைவில் திறக்க முதலமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளதாகவும், வடகிழக்கு பருவமழையால் தமிழ்நாட்டில் எந்தவொரு பொருள்கள் மற்றும் உயிர் சேதம் ஏற்படாத வண்ணம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மதுரை, விருதுநகர், சிவகங்கை, தென்காசி, புதுக்கோட்டை, தூத்துக்குடி, திண்டுக்கல், கோயமுத்தூர், திருப்பூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் நவம்பர் 6ஆம் தேதி முதல் 8 வரை கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்ததை அடுத்து, அனைத்து மாவட்ட நிர்வாகமும் மழையை எதிர்கொள்ள தயாராக இருப்பதாக தெரிவித்த அமைச்சர், மதுரை மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்படும் 27 இடங்கள் கண்டறியப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், மதுரை மாநகரில் உள்ள 33 ஊரணிகளில் மழை நீர் சேகரிக்கப்பட்டு வருவதாகவும், சாலைகளில் தேங்கும் தண்ணீரை நீர் நிலைகளில் சேகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.