தூத்துக்குடி மாவட்டம், கடம்பூர் பகுதியைச் சேர்ந்த செல்வகுமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில்," இந்தியாவில் செம்மொழி என, ஆறு மொழிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதில் அனைத்து மொழிகளிலும் மிகப் பழமையான மொழியாக தமிழ் இருந்து வருகிறது. உலகம் முழுவதும் 100 மில்லியனுக்கும் அதிகமானோர் தமிழர்களாக இருந்து வருகின்றனர். ஆனால், கடந்த மூன்று வருடங்களாக தமிழ் மொழி வளர்ச்சிக்கென ரூ.22.94 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. பதினான்காயிரம் நபர்களை மட்டும் கொண்ட சமஸ்கிருத மொழிக்கு, கடந்த மூன்று வருடங்களில் ரூ.643.85 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
சமஸ்கிருத மொழி கற்றுக் கொள்ள இந்தியா முழுவதும் 27 கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. ஆனால், மிகவும் பழமையான மொழிகளில் ஒன்றான தமிழ் மொழிக்கு ஒதுக்கப்பட்ட நிதியை விட, சமஸ்கிருதத்திற்கு 22% அதிகமான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது ஏற்கத்தக்கதல்ல. எனவே, செம்மொழியான தமிழ்மொழி வளர்ச்சிக்கு ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யவும், சென்னையில் உள்ள மத்திய செம்மொழி கல்வி நிறுவனத்தை நிகர்நிலைப் பல்கலைக்கழகமாக மாற்றவும், இந்தியா முழுவதும் செம்மொழியான தமிழை கொண்டு செல்வதற்கு கல்வி நிறுவனங்கள் தொடங்கவும் உத்தரவிட வேண்டும்" மனுவில் கோரியிருந்தார்.
இம்மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆனந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இம்மனுவுக்கு மத்திய அரசு பதிலளிக்குமாறு உத்தரவிட்டு விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க: அதிமுக வேட்பாளர் பெயரை மாற்றி அறிவிக்கக் கோரி ஆர்ப்பாட்டம்!