மதுரை: சென்னையை சேர்ந்த முத்து கிருஷ்ணன் என்பவர் தன்னை சென்னை லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலர் எனக்கூறி மதுரையிலுள்ள லஞ்ச ஒழிப்புத் துறையில் பணியாற்றும் அலுவலர்களையே ஏமாற்ற முயன்றுள்ளார்.
மதுரை மாவட்டம் பேரையூர் அருகே கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வரும் முத்துக்காளை என்பவர் கிராமத்தில் உள்ள மக்களுக்கு மின் இணைப்பு வழங்குவதற்கு முறைகேடாக சான்றிதழ் வழங்கியதாக புகார் எழுந்துள்ளது. அது தொடர்பாக விசாரணை மதுரை லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் முத்து கிருஷ்ணன் கிராம நிர்வாக அலுவலரான முத்துக்காளை தன்னுடைய உறவினர் என கூறி சிபாரிசு செய்திருக்கிறார். மேலும் வழக்கிலிருந்து விடுவிக்க கோரி பரிந்துரைக்கு வந்த அவர் தன்னை லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலர் என லஞ்ச ஒழிப்புத்துறை அலுவர்களிடமே அறிமுகம் செய்து கொண்டுள்ளார்.
முத்து கிருஷ்ணனிடம் மதுரை லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் பணியாற்றும் காவல் ஆய்வாளர் சூரியகலா, எத்தனை ஆண்டுகளாக வேலை செய்கிறீர்கள்? அடையாள அட்டையை காட்டுங்கள்? என்று கேட்டதற்கு தன்னிடம் அடையாள அட்டை இல்லை என கூறி முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளார்.
இதனால் சந்தேகம் அடைந்த ஆய்வாளர் சூரியகலா அளித்த புகாரின் அடிப்படையில் தல்லாகுளம் காவல்துறையினர் அவரை விசாரித்தனர். அதில் அவர் போலியான அலுவலர் என்பதும், சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் தனியார் பாதுகாவலராக பணியாற்றி வருவதும் தெரியவந்தது. இதனையடுத்து, போலி அலுவலரான முத்து கிருஷ்ணனை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: கேரளா TO தமிழ்நாடு - கோவையில் 2 டன் குட்கா பறிமுதல்