மதுரை: வாழ்வதற்கான கடைசிப் புகலிடமாக இறையிடம் தஞ்சம் புகுந்து தனக்கானதை யாசித்த படி (கை தொழுத படி) அந்த தர்ஹாவின் முன் நிற்கிறது ஒரு சிறு கூட்டம். மனதிற்குள் பூட்டி வைத்திருந்த ஏதோ ஒரு பெருஞ்சோகம் வெளியேறத் துடித்து, யாசித்து நின்ற பெண்ணொருத்தியிடம் சந்நதமாய் (சாமியாட்டம்) வெளிப்பட, அதன் வேகத்தில் தலையிலிருந்து கீழ விழுகிறது முக்காடாய் அணிந்திருந்த துண்டு.
அடுத்த நொடி அப்பெண்ணின் கைகள் அணிச்சையாய் துண்டைத் தேடி மீண்டும் முக்காட்டை தலைபோர்த்திக் கொள்கிறது. மாற்று மதத்தினரை சந்நதம் கொண்டு ஆடக்கூடாதென தர்ஹா நிர்வாகம் தடுக்கவில்லை; தன்னிலை மறந்து ஆடிய போதும், பெண்கள் முக்காடிட்டிருக்க வேண்டும் என்ற இஸ்லாத்தின் மரபைச் சாமியாடிய பெண் மறக்கவில்லை. மதநல்லிணக்கத்திற்கான வேர்களை ஆதிதொட்டே வரலாறாகவும், வாழ்க்கையாவும் கொண்டு விளங்குகிறது கோரிபாளையம் தர்ஹா.
சைவ - வைணவ இணைப்பிற்கான சாட்சி மதுரை சித்திரைத்திருவிழா என்றால், சைவவைணவ - இஸ்லாமிய இணக்கத்திற்கான சாட்சியம் கோரிபாளையம் ஹஜ்ரத் காஜா சையத் சுல்தான் அலாவுதீன் மற்றும் ஹஜ்ரத் காஜா சையத் சுல்தான் சம்சுதீன் அவுலியாக்கள் தர்ஹா. இந்த இணக்கத்திற்கான விதை 13ஆம் நுற்றாண்டில் தர்ஹா உருவான கூன்பாண்டியன் காலத்திலிருந்தே தொடங்குகிறது.
தன் வயிறு வலியைத் தீர்த்து வைத்த அலாவுதீன் உத்தெளஜியின் வேண்டுகோளுக்கிணங்க, தர்ஹாவின் நிர்வாக செலவிற்காக சொக்கிகுளம், பீபிகுளம், கண்ணனேந்தல், திருப்பாலை, சிறுதூர் உள்ளிட்ட 9 கிராமங்களை விலைப் பிரமாணம் செய்து, பட்டயம் எழுதிக் கொடுத்துள்ளார்.
அவருக்குப் பின் இரண்டு நூற்றாண்டுகள் கழித்து வந்த, 15 ஆம் நூற்றாண்டில் மதுரையை ஆண்ட வீரப்ப நாயக்கர் பாண்டியனின் பிரமாணத்தை உறுதிப்படுத்தி கல்வெட்டு சாசனமாக்கியுள்ளார். அந்த கல்வெட்டு தற்போதும் தர்ஹாவின் தென்புறம் உள்ளது. கடந்த 1338 - 40 ஆகிய இரண்டு ஆண்டுகளில் மதுரையை ஆண்ட அலாவுதீன் உத்தெளஜி சுல்தானின் நினைவாக உருவாக்கப்பட்டது இந்த தர்ஹா.
தனது ஆட்சியாண்டில், சுல்தான் அலாவுதீன் உத்தெளஜி எல்லா மதத்தவர்களையும் தனது நிர்வாக அலுவலராக நியமித்திருக்கிறார். ஓதுவார், தூய்மைப் பணியாளர்கள், குயவர்கள், மருத்துவர்கள், தண்டல்காரர்களுக்கு நிலங்களை மானியமாக அளித்துள்ளார். அவரின் மதநல்லிணக்கம் அவர் பெயரிலான தர்ஹாவில் இன்றும் தொடர்கிறது.
மனக்குறை, தீராத நோய், இன்னபிற சிக்கல்கள் தீர தர்ஹாவை நாடிவரும் எல்லா சமய மக்களுக்கும் எந்தவித பாகுபாடின்றி பாரம்பரியப்படி வழிபாடு நடத்தி குறைகள் தீர உதவி வருகிறார்கள் தர்ஹாவின் வாலிமார்கள். சமூகத்தால் கைவிடப்பட்டவர்களின் புகழிடமாகக் கோரிப்பாளையம் தர்ஹா இன்றும் விளங்கி வருகிறது.
கி.பி., 13ஆம் நூற்றாண்டில் மதுரையை ஆண்ட கூன்பாண்டியன் காலத்திலிருந்து கோரிப்பாளையம் தர்ஹா இருந்து வருகிறது. அனைத்து மதம் சார்ந்த மக்களின் வேண்டுகோளை நிறைவேற்றும் விதமாக இங்கு இருக்கும் அவுலியாக்கள் அருளாசி வழங்கி வருகிறார்கள். இப்போதும் மத நல்லிணக்கத்திற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழும் பள்ளிவாசல்களில் கோரிப்பாளையம் தர்ஹாவிற்கு முதன்மையான இடமுண்டு' என்கிறார் தர்ஹாவின் நிர்வாக அறங்காவலர் பாஷல் பாஷா.
தர்ஹாவை நாடி வருபவர்களிடத்தில் மட்டும் சமநல்லிணக்கம் பேணாமல், வழிபாட்டு முறைகளிலும் அனைத்து மத இணக்கத்தை சடங்காக்கி, இன்று வரை கடைபிடிக்கப்பட்டும் வருகிறது. அலாவுதீன் உத்தெளஜியின் நினைவாக நடைபெறும் சந்தனகூடு திருவிழாவில் கொடி வழங்கும் உரிமை இந்து மதத்தைச் சார்ந்த ஒரு சமூதாயத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
"கோரிபாளையம் தர்ஹாவில் ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் சந்தனகூடு விழாவிற்கு, கொடி வழங்கும் உரிமை எங்கள் சமூதயத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. அப்போது தர்ஹா சார்பில் எங்களுக்குச் சிறப்பு மரியாதை வழங்கப்படும். அதேபோல், நாங்கள் நடத்தும் மாரியம்மன் கோயில் திருவிழாவில் தர்ஹாவின் முக்கியஸ்தர்களுக்கு மரியாதை செய்கிறோம் இந்த பாரம்பரியம் இன்றும் தொடர்கிறது" என்கிறார் தர்ஹாவிற்கு கொடி வழங்கும் உரிமை பெற்ற சமூதாயத்தைச் சேர்ந்த தனபால். தர்ஹாவில் அந்த குறிப்பிட்ட சமூதாயம் சார்பில் கொடிமரம் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.
சுமார் 1.40 ஏக்கர் பரப்பளவில், கல்தூண்களுடன், 58 அடியுடைய சதுரமான மேல் தளத்தில் கல்சிலாப்புகள் பதிக்கப்பட்டுள்ளன. 17 அடி உயரத்தில் கொண்ட இந்த தர்ஹாவில் 17 அடி அகலத்தில் சதுரமான மத்திய அறை அமைந்துள்ளது. அதன் மேற்கூரை, 400 டன் எடையுடைய ஒரே கல்லால் ஆனது. 27 அடி உயரத்தில் இந்த கல் அமைக்கப்பட்டுள்ளது வியப்பைத் தருகிறது.
தர்ஹா வளாகத்தில், தற்போது 50க்கும் அதிகமானோர் தங்கி உடல் மனநல சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களுக்கான உணவு, உறைவிடம் போன்ற அடிப்படைத் தேவைச் செலவுகளை தர்ஹா நிர்வாகம் கவனித்துக் கொள்கிறது. அங்கு தங்கி இருப்பவர்களுக்கான மூன்று வேளை உணவினை பிரபல தனியார் நிறுவங்கள் வழங்கி இறைபணியில் தங்களை இணைத்து கொள்கின்றன.
செய்வினை கோளாறு காரணமாக மோசமாக உடல் நலம் பாதிக்கப்பட்ட நான் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டேன். இங்கே கிடைத்த அன்பு, ஆதரவால் இப்போது பூரணமாக குணமடைந்து விட்டேன். எந்த பாகுபாடு இல்லாமல் இங்குள்ள குருமார்கள் எங்களை குணப்படுத்தி வருகின்றனர்" 3 மாதங்களுக்கு முன் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு தான் குணமான நிதர்சனத்தை விளக்குகிறார் மதுரை அண்ணாநகர்பகுதியைச் சேர்ந்த முத்துலட்சுமி.
தர்ஹாவின் பரம்பரை அறக்கட்டளை உறுப்பினர்களாக, ஏறக்குறைய 57 பேர் இருக்கிறார்கள். ஹக்தார்கள் என அழைக்கப்படும் இவர்கள், தர்ஹாவிற்கு நன்கொடையாக வரும் தொகைகளை தர்ஹா மேம்பாட்டிற்கும், அங்குத் தங்கியுள்ள ஏழை எளிய மக்களின் நலன்களுக்காகவும் செலவு செய்கின்றனர்.
700 ஆண்டுகள் பழமையான கோரிப்பாளையம் தர்ஹா ஆன்மிக சுற்றுலாத் தளங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. தமிழ்நாடு சுற்றுலாத்துறை மதுரையின் வரலாற்று சிறப்பு மிக்க இடங்களில் ஒன்றாகக் கோரிப்பாளையம் தர்ஹாவை அங்கீரித்து, அதன் அடிப்படை கட்டமைப்பு வசதிக்களுக்காக, கடந்த 2018 - 19 ஆம் நிதியாண்டில் நிதி ஒதுக்கியுள்ளது. வெளிப்படையான நிர்வாகத் தன்மையுடன், நம்பிக்கையுடன் வருகின்ற மக்களுக்கான இறை சேவையுடன் எங்களின் பணி தொடர்கிறது என்கிறார் நிர்வாகக் குழு உறுப்பினரான எஸ்.என். பாபு.
கடவுள் வணக்க வழிபாட்டில் வித்தியாசங்கள் பல இருந்தாலும், ஏக இறையிடம் சரணடைந்து வளம் பெறுவதில் எந்த வித பாகுபாட்டிற்கும் இடம் இல்லை என்பதை கோரிபாளையம் தர்ஹா உணர்த்தி வருகிறது என்றால் மிகையில்லை.
இதையும் படிங்க: கேரளாவின் சாமுராய் களரி மீனாட்சி அம்மாள்!