மதுரை: மதுரை உதவி மண்டல மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், புதுக்கோட்டையில் நேற்று (அக்.23) முன்தினம் அலுவலர்கள் சோதனை செய்தனர். .
அப்போது பார்சலை பெறுவதற்காக பார்சல் அலுவலகத்திற்கு இரண்டு பேர் வந்துள்ளனர். இதனையடுத்து அவர்களை அலுவலர்கள் சுற்றிவளைத்து பிடித்தனர். அந்த பார்சலை ஆய்வு செய்ததில் 620 கிராம் ஆசிஷ் ஆயில் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அதனை பறிமுதல் செய்தனர். இந்தப் பார்சலை வாங்கும் நபர் கோயம்புத்தூரில் இருப்பதாக பிடிபட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தெரியவந்தது.
இதனையடுத்து நேற்று(அக்.24) கோயம்புத்தூரில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அலுவலர்கள் சோதனை மேற்கொண்டதில் 21.48 கிராம் ஹேஷ் ஆயில் மற்றும் 227 கிராம் மேஜிக் மஸ்ரூம் ஹனி என்ற போதைப்பொருளை அலுவலர்கள் பறிமுதல் செய்து, அதை வைத்திருந்த ஒருவரை கைது செய்தனர்.
இந்நிலையில் பிடிபட்ட 3 பேரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் போதைப் பொருட்களை கடத்தி புதுக்கோட்டை மற்றும் தென்னிந்திய மாநிலங்களில் விற்பனை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளனர்.
சமீபகாலமாக கொரியர்கள் ,பார்சல்கள் மூலம் போதைப் பொருளை கடத்துவது அதிகரித்து வருகிறது.
போலி முகவரிகள் கொடுத்து பார்சல் மூலம் போதைப் பொருள் கடத்துவதால், போதைப்பொருள் கடத்துபவர்களை பிடிப்பது சவாலாக இருப்பதாக மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் மேஜிக் மஸ்ரூம் ஆயில் ஒரு வகையான போதை பொருள் எனவும், பிடிபட்டவர்களில் ஒருவர் போதைப் பொருட்கள் கடத்தல் கும்பலின் தலைவன் எனவும் அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட மூன்று பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதையும் படிங்க:இந்து முன்னணி எதிர்ப்பை மீறி 'பெரியாரும் இஸ்லாமும்' நிகழ்ச்சி நடத்த மனோன்மணியம் பல்கலை., முடிவு