மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்த சக்தி ராவ் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல்செய்த மனுவில் குறிப்பிட்டிருந்ததாவது,
"தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் 2019 ஜனவரி 1இல் துணை ஆட்சியர், காவல் துணைக் கண்காணிப்பாளர், வணிகவரி அலுவலர் உள்ளிட்ட 181 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்புவிடுத்தது. தமிழ் வழியில் கல்வி பயின்றதற்கான ஒதுக்கீட்டிலும் நான் தேர்வுசெய்யப்படவில்லை.
இது குறித்து விசாரித்தபோது, தமிழ் வழியில் கல்வி பயின்றதற்கான இட ஒதுக்கீட்டுச் சலுகை, தொலைநிலைக் கல்வியில் பயின்றவருக்கும் வழங்கப்பட்டிருப்பது தெரியவந்தது. தொலைநிலைக் கல்வி பயின்றவர்களுக்கு தமிழ் வழியில் பயின்றதற்கான இட ஒதுக்கீடு வழங்குவது பொருத்தமாக இருக்காது.
தொலைநிலைக் கல்வியில் பயில்வோர் சில பாடங்களை ஆங்கில வழியில் பயில்கின்றனர், சில பாடங்களைத் தமிழ் வழியில் படிக்கின்றனர். ஆகவே இவர்களைத் தமிழ் வழியில் பயின்றவர்களாகக் கருத இயலாது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் ஒவ்வொரு தேர்வு அறிவிப்பிலும் தமிழ் வழியில் பயின்றவருக்குக் கொடுக்கப்படும் 20 விழுக்காடு இட ஒதுக்கீட்டை பெரும்பாலும் தொலைநிலைக் கல்வி பயின்றவர்களே பெற்றுவருகின்றனர்.
ஆகவே தமிழ் வழியில் கல்வி பயின்றதற்கான சலுகை அடிப்படையில் தேர்வானவர்களுக்கு, பணி நியமன உத்தரவு வழங்கத் தடைவிதிக்க வேண்டும். தமிழ் வழியில் பயின்றதற்கான இட ஒதுக்கீடு அடிப்படையில் குரூப் 1 தேர்வு நடைமுறைக்குத் தடைவிதிக்க வேண்டும்.
தொலைநிலைக் கல்வியில் அல்லாமல் கல்லூரிக்குச் சென்று தமிழ் வழியில் பயின்றவர்களை அடிப்படையாகக் கொண்டு புதிய பட்டியல் வெளியிட்டு குரூப் 1 பணியிட நியமனத்தை நடத்த உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்ததுபோது நீதிபதிகள்,
"ஒன்று முதல் 12ஆம் வகுப்பு, கல்வி அல்லது கோரப்பட்டுள்ள தகுதி போன்ற முழுக் கல்வியையும், தமிழ் மொழியில் பயின்றவர்கள் மட்டுமே தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் தமிழ் வழியில் பயின்றதற்கான 20 விழுக்காடு இட ஒதுக்கீடு பெற தகுதியானவர்கள். அவர்களுக்கு மட்டுமே தமிழ் வழியில் பயின்றவர்களுக்கான 20 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்குமாறு தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிடப்படுகிறது.
மேலும், மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் தமிழ் வழியில் பயின்றவருக்கான போலிச் சான்றிதழ் வழங்கப்பட்டது என்பதை ஊழல் மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் விசாரணை நடத்தி, மூன்று மாதங்களுக்குள் அறிக்கைத் தாக்கல்செய்ய வேண்டும்" என உத்தரவிட்டனர்.